3 நாட்களுக்குள் வெடித்துச் சிதறும் அபாயம் – ஈரானுக்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை!

ஈரானில் எண்ணெய் குழாய்கள் ஏதேனும் ஒரு காரணத்தால் மூடப்பட்டால் அந்த குழாய் வெடித்துவிடும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Hero Image

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு மீண்டும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை ஃபாக்ஸ் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் ட்ரம்ப் கூறியதாவது“ஈரானுக்கு இப்போது மூன்று நாட்கள்தான் உள்ளன. போரை முடிவுக்குக் கொண்டுவர ஒரு ஒப்பந்தத்தை ஏற்க வேண்டும். இல்லையென்றால், அவர்களின் எண்ணெய் குழாய்கள் உள்ளிருந்தே வெடித்துச் சிதறும்.

எண்ணெய் குழாய்களில் பெரும் அளவில் எண்ணெய் பாய்ந்து கொண்டிருக்கும் நிலையில், அந்தக் குழாயை ஏதேனும் ஒரு காரணத்தால் மூட வேண்டிய நிலை ஏற்பட்டால் அதாவது எண்ணெயை கொள்கலன்களிலோ அல்லது கப்பல்களிலோ நிரப்ப முடியாத நிலை வந்தால் அந்தக் குழாய் இயந்திர ரீதியாகவும், பூமியின் இயற்கை சக்திகளாலும் வெடித்துச் சிதறிவிடும்.அவர்கள் தற்போது கப்பல்களை இழந்துவிட்டனர். ஏனென்றால் நாங்கள் ஹார்முஸ் நீரிணையில் தடை விதித்துள்ளோம்.

எனவே எண்ணெயை சேமிக்கவோ, ஏற்றுமதி செய்யவோ இடம் இல்லை. இந்த நிலை தொடர்ந்தால், மிக மோசமான விளைவு ஏற்படும்.ஒருமுறை வெடித்துச் சிதறினால், அந்தக் குழாய்களை முன்பு இருந்ததைப் போல மீண்டும் கட்டியெழுப்பவே முடியாது. அதிகபட்சம் 50% திறனில் மட்டுமே செயல்படும்.”என தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் மேலும் கூறினார் “ஈரான் எங்களை அணுக விரும்பினால், தொலைபேசியில் பேசலாம். ஆனால் அவர்கள் ஒருபோதும் அணு ஆயுதம் வைத்திருக்க முடியாது.”இந்த எச்சரிக்கை, ஈரான் தரப்பில் ஹார்முஸ் நீரிணையைத் திறப்பதற்கான புதிய யோசனை வந்துள்ள நிலையில் வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும், அணு ஆயுதப் பேச்சுவார்த்தையை ஒத்திவைக்குமாறு ஈரான் கோரியுள்ளது.

இதனிடையே, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி பாகிஸ்தான் சென்றிருந்தாலும், அமெரிக்க அதிகாரிகளுடன் எந்த சந்திப்பும் இல்லை என்று ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது. ஈரான், அமெரிக்காவின் அதிகப்படியான கோரிக்கைகளைச் சுட்டிக்காட்டி, இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தையிலிருந்து பின்வாங்கியுள்ளது.ட்ரம்ப் நிர்வாகம், ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை முழுமையாகத் தடுக்கும் நோக்கில் ஹார்முஸ் நீரிணையில் தொடர்ந்து உடல் தடையை (physical blockade) நீடித்து வருகிறது.