ஈரான் : கதம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் துணை இன்ஸ்பெக்டர் சர்தார் அசாதி, ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் மீண்டும் தீவிரமடையும் அபாயம் இருப்பதாக Fars செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: “அமெரிக்க அதிகாரிகளின் செயல்பாடுகள் மற்றும் அறிக்கைகள் முக்கியமாக ஊடகங்களை மையப்படுத்தியவை. முதலில் எண்ணெய் விலையை வீழ்ச்சியடையாமல் தடுப்பதும், இரண்டாவது தாங்கள் உருவாக்கிய குழப்பத்திலிருந்து வெளியேறுவதும்தான் அவர்களின் நோக்கம். அமெரிக்கர்களின் எந்தவித புதிய சாகசத்துக்கும் அல்லது முட்டாள்தனத்துக்கும் ஈரானிய ஆயுதப்படைகள் முழுமையாக தயாராக உள்ளன” என்றார்.
இதேவேளையில், ஈரான் அமெரிக்க தளங்களுக்கு ஏற்படுத்திய சேதம் குறித்து CNN வெளியிட்ட விசாரணை அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குவைத்தில் உள்ள அமெரிக்காவின் மிகப் பெரிய தளமான Camp Buehring கிட்டத்தட்ட காலியாகி, கடுமையான சேதத்துக்கு உள்ளாகியுள்ளதாக CNN தெரிவித்துள்ளது.
ஈரான், வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க தளங்களுக்கு ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதில், குறைந்தபட்சம் 8 நாடுகளில் உள்ள 16 அமெரிக்க இராணுவ நிலையங்கள் சேதமடைந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை இப்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக CNN அறிக்கை கூறுகிறது.
அமெரிக்கா விதித்த தடை காரணமாக ஈரான் சுமார் 4.8 பில்லியன் டாலர் (கிட்டத்தட்ட 5 பில்லியன் டாலர்) எண்ணெய் வருவாயை இழந்துள்ளதாக Axios செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹார்முஸ் நீரிணை அருகேயுள்ள கப்பல் போக்குவரத்து பாதைகளில் ஏற்பட்டுள்ள இடையூறு காரணமாக ஈரானுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் 60 நாட்களுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில், பேச்சுவார்த்தை முட்டுக்கட்டையில் உள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தை முக்கிய காரணமாகக் காட்டி போரைத் தொடங்கியதாகக் கூறி வருகிறார்.இந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் மீண்டும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
