ஆயுதங்களை ஒப்படைக்கும் ஹமாஸ்... அமைதி ஒப்பந்தம் வெற்றியா? டிரம்ப் முக்கிய தகவல்!

காசாவில் ஹமாஸ் அமைப்பு தனது ஆயுதங்களை முழுமையாகக் கைவிட ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

Hero Image

வாஷிங்டன் : கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அமைதித் திட்டத்தின் ஒரு பகுதியாக, காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பு மற்றும் பிற ஆயுதக் குழுக்கள் தங்களது ஆயுதங்களை முழுமையாகக் கைவிட ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக வலைதளம் மூலம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

காசாவில் கடந்த காலங்களில் நடைபெற்றுவந்த தீவிர போரை முடிவுக்குக் கொண்டுவந்த 20 அம்ச அமைதித் திட்டத்தின் மிக முக்கிய மைல்கல்லாக இந்த ஒப்பந்தம் பார்க்கப்படுகிறது. நீண்ட மாதங்களாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் வெற்றியாக இந்த வரலாற்று ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக 'அமைதி வாரியம்' (Board of Peace) தெரிவித்துள்ளது.

இந்த புதிய ஒப்பந்தத்தின்படி, காசா பகுதி முழுமையாக ஆயுதங்களற்ற பகுதியாக மாற்றப்படவுள்ளது. வரலாற்றில் முதன்முறையாக ஹமாஸ் அமைப்பு தனது அனைத்து ஆயுதங்களையும் ஒப்படைப்பதற்கான செயல்திட்டத்திற்கு அதிகாரப்பூர்வமாகச் சம்மதித்துள்ளது. இந்த ஆயுதக் களைப்புப் பணி படிப்படியாக நிறைவேற்றப்படும். ஹமாஸ் தனது ஆயுதங்களைக் கைவிடுவதைத் தொடர்ந்து, காசா பகுதியில் இருந்து இஸ்ரேலிய ராணுவம் முழுமையாக வாபஸ் பெறப்படும்.

ஆயுதக் களைப்புப் பணிகள் நிறைவடைந்தவுடன், காசாவின் பாதுகாப்பு மற்றும் நிர்வாகப் பொறுப்புகள் புதிய பாலஸ்தீன அரசிடம் ஒப்படைக்கப்படும். சர்வதேச உறுதிப்படுத்தும் படை (International Stabilization Force) மற்றும் புதிதாக உருவாக்கப்படும் பாலஸ்தீன காவல் துறை ஆகியவை இணைந்து காசா பகுதி மக்களுக்குப் பாதுகாப்பான சூழலை உறுதி செய்யும். இதன் மூலம் காசா இனி எப்போதுமே பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படாது என்றும், இஸ்ரேல் தனக்குத் தேவையான பாதுகாப்பைப் பெறும் என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த ஒட்டுமொத்த அமைதி முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்த எகிப்து, கத்தார் மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகளுக்கு டிரம்ப் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2023 அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் சுமாா் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதை அடுத்து இந்த போர் வெடித்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததுடன், காசா பகுதியில் கடுமையான மனிதாபிமான நெருக்கடியும் ஏற்பட்டது.

கடந்த இலையுதிர் காலத்தில் (Fall) அறிமுகப்படுத்தப்பட்ட 20 அம்ச அமைதித் திட்டத்தின் மூலம் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதோடு, பணயக்கைதிகள் மற்றும் கைதிகள் பரிமாற்றமும் நடைபெற்றது. தற்போது எட்டப்பட்டுள்ள இந்த ஆயுதக் களைப்பு ஒப்பந்தம், அப்பகுதியில் நிரந்தர அமைதியை நிலைநிறுத்துவதற்கான மிக முக்கியமான திருப்பமாகக் கருதப்படுகிறது.