புரேவி எதிரொலியாக ஆறு தென்மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

The Chennai Meteorological Department has warned of heavy rains in six southern districts of Tamil Nadu due to the storm.

புரேவி புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள ஆறு தென் மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது.

நேற்று தென்கிழக்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி அது புயலாக வலுவடைந்ததையடுத்து புரேவி என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த புயல் சுமார் பாம்பனுக்கு கிழக்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரிக்கு வடக்கில் 600 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் இந்த புயல் வலுப்பெறும் எனவும் அதன் பின் வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து செல்லும் எனவும் கூறப்பட்டிருந்தது. அதன்படி நேற்று இரவு இலங்கையை கடந்துள்ள நிலையில், இன்று காலை மன்னார் வளைகுடா வழியாக குமரி கடல் பகுதிக்கு இந்த புயல் வரக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தூத்துக்குடி, கன்னியாகுமரி ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, சிவகங்கை ஆகிய ஆறு தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், விழுப்புரம் கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் வங்கக்கடல், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் சில இடங்களில் மட்டும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையத்தால் கூறப்பட்டுள்ளது.