சென்னை : தனியார் ஊடகம் ஒன்றுக்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் தற்போதைய அரசியல் சூழல் குறித்து நேர்காணல் அளித்துள்ளனர். தவெக அரசுக்கு விசிக அளித்து வரும் ஆதரவு குறித்தும், அமைச்சரவை பங்கீடு தொடர்பாகச் சமூக வலைதளங்களில் எழும் விமர்சனங்கள் குறித்தும் தங்களின் விளக்கங்களை பற்றியும் பேசியிருக்கிறார்.
தேர்தலுக்கு முன்பாகத் தவெக மீதும் அதன் தலைவர் விஜய் மீதும் தமக்கு இருந்த முக்கிய சந்தேகங்கள் தற்பொழுது முழுமையாகக் கலைந்துள்ளதாகத் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது...
ஆர்எஸ்எஸ் வளர்ப்பு? : "விஜய் மற்றும் சீமான் ஆகியோர் ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளைகளோ என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. ஏனெனில், அவர்கள் பாஜகவை விடுத்து திமுக மற்றும் அதன் கூட்டணியை மட்டுமே குறிவைத்து விமர்சித்தனர்.
வெளிப்படையான கடிதம்: ஆனால், தேர்தலில் வென்ற பிறகு அவர்கள் அதிமுகவிடம் ஆதரவு கோராமல், மதச்சார்பின்மை மீது நம்பிக்கை கொண்டு காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் விசிக ஆகிய எங்களுக்கு வெளிப்படையாகக் கடிதம் எழுதி, நேரில் வந்து ஆதரவு கோரினர். இதன் மூலம் அவர்களின் மதச்சார்பற்ற கொள்கை மீதான சந்தேகம் தீர்ந்தது." எனத் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
திமுக கூட்டணியை உடைக்கும் சதியா?: "தேர்தலுக்கு முன்பாக எங்களை அவர்கள் அழைத்தபோது, திமுக கூட்டணியை உடைக்கப் பார்க்கிறார்களோ என்ற சந்தேகம் திமுகவினரிடமும் இருந்தது. அதனை நான் முதலமைச்சரிடமே நேரடியாகத் தலைமைச் செயலகத்தில் வைத்துப் பேசினேன். எது எப்படியாக இருந்தாலும், தற்பொழுது அமைச்சரவையில் இணைந்துள்ளோம். இந்த தவெக அரசுக்குக் கடைசி வரை விசிக உறுதியான ஆதரவை வழங்கும்." என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம்!
அமைச்சரவையில் இணைந்தது குறித்து எழும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த திருமாவளவன், "அமைச்சரவையில் இணைந்துவிட்டதால் அதிலேயே நீடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எங்களுக்குள் எந்த ஒரு பொதுக் குறைந்தபட்சத் திட்டமோ (Common Minimum Program) அல்லது எழுத்துப்பூர்வ உடன்பாடோ இல்லை. தவெக அரசுடன் உடன்பாடு இல்லாத கொள்கை முடிவுகள் எடுக்கப்படும் பட்சத்தில், எந்த நேரத்திலும் நாங்கள் அமைச்சரவையில் இருந்து விலகும் சுதந்திரம் எங்களுக்கு உள்ளது" எனத் தனது அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஆதவ் அர்ஜுனா வேண்டுகோள்
திருமாவளவனின் இந்த பேட்டியைத் தொடர்ந்து, தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் சில விஷயங்களை பேசியிருக்கிறார் .
இது குறித்து அவர் பேசியதாவது "அண்ணன் திருமாவளவன் அவர்கள், தங்களின் கட்சி உயர்நிலைக் குழு முடிவுகளின்படி எப்போது வேண்டுமானாலும் அமைச்சரவையில் இருந்து விலகலாம் என்ற ஜனநாயக ரீதியான கருத்தையே பதிவு செய்தார். ஆனால், இதனைத் திமுகவினர் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, தவெக மற்றும் விசிக இடையே ஏதோ கடுமையான சண்டை மூண்டுவிட்டது போல் சமூக வலைதளங்களில் (Social Media) திட்டமிட்டு வதந்திகளைப் பரப்பி சதி செய்து வருகின்றனர்.
நான் அண்ணன் திருமாவளவன் அவர்களிடம் நேரடியாகப் பேசினேன். 'விடுதலைச் சிறுத்தைகளால் தவெக அரசுக்கு எப்போதும் எந்த ஆபத்தும் வராது; எங்கள் ஆதரவு முழுமையாக இருக்கும்' என்று அவர் உறுதியளித்துள்ளார். எனவே, திமுகவின் இத்தகைய மலிவான சதிச் செயல்களுக்குப் பொதுமக்கள் யாரும் செவிசாய்க்க வேண்டாம்" என்று ஆதவ் அர்ஜுனா கேட்டுக்கொண்டுள்ளார்.
