தமிழ்நாட்டையே காப்பாற்றப் போகும் முதல்வர் என்னை காப்பாற்ற மாட்டாரா? - காமராஜ்

நான் நேற்றைக்கு ஆதரவு கொத்தேன், இன்றைக்கும் ஆதரவு கொடுக்கிறேன், 5 ஆண்டுகளுக்கும் ஆதரவு கொடுப்பேன் என எம்.எல்.ஏ. காமராஜ் தெரிவித்துள்ளார்.

Hero Image

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் இன்று காலை முன்மொழியப்பட்டது.

அப்போது சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு ஆதரவாக உரையாற்றிய அமமுக எம்எல்ஏ எஸ்.காமராஜ், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், இன்று பேரவையில் மீண்டும் விஜய் அரசுக்கு வலுவான ஆதரவு தெரிவித்தார். மன்னார்குடி தொகுதி எம்எல்ஏவான காமராஜ், சட்டமன்றத்தில் உரையாற்றுகையில், “நான் நேற்றும் ஆதரித்தேன், இன்றும் ஆதரிக்கிறேன், நாளையும் ஆதரிப்பேன். இதனால் என்னை ஒரு இயக்கத்திலிருந்து நீக்கினார்கள். தமிழ்நாட்டையே காப்பாற்றப் போகும் முதலமைச்சர், என்னை மட்டும் காப்பாற்ற மாட்டாரா?” என்று உணர்ச்சிப் பூர்வமாகக் கேள்வி எழுப்பினார்.

அவர் மேலும் பேசுகையில், “நம்முடைய முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்று நான்கு நாள்தான் ஆகிறது. திருச்சியில் முன்னூற்று அறுபத்தி நான்கு ரவுடிகள் தானாக வந்து சரணடைந்துள்ளனர். 217 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. கஞ்சா, கள்ளச்சாராயம் வியாபாரிகள் எங்கே இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. ஒரு கரிஸ்மா தமிழ்நாட்டுக்கு கிடைத்துவிட்டது.

ஒரு நல்ல தலைவர் கிடைத்துவிட்டார்” என்று முதலமைச்சர் விஜய்யைப் பாராட்டினார். காமராஜ், “நான் ஒரு தனி மனிதன். நீங்கள் பேசும்போது நடந்த தவறுகளை நானும் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் சுட்டிக்காட்டுவேன். ஆனால், முதலமைச்சருக்கு எனது ஆதரவு தொடரும்” என்றும் தெரிவித்தார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக செயல்பட்டதால் காமராஜை நேற்று கட்சியில் இருந்து நீக்கியிருந்தார். இந்நிலையில், இன்று சட்டமன்றத்தில் காமராஜ் விஜய் அரசுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், காமராஜின் ஆதரவு அவர்களுக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளது.