சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் போது, தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் உரையாற்றினார். அப்போது பல முக்கிய கேள்விகளையும் எழுப்பினார்.
பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், “முதலமைச்சர் அன்னைக்கு சொன்னாரு, ‘அரசு குடும்பத்திலிருந்து நான் வந்தவன் இல்லை’ என்று. ஆனால் இன்றைக்கு அவருடைய ராஜகுருவாக இருப்பவரை திரு. ரத்தன் பண்டிட் என்பவரை அரசியல் சிறப்பு அதிகாரியாக அரசு வேலையில் அமர்த்தியதை ஒட்டுமொத்த தமிழக மக்கள் சார்பாக வன்மையாக இந்த வரலாற்று சிறப்பு மிக்க அவையில் நான் குறிப்பிடக் கடமைப்பட்டிருக்கிறேன்.
அப்படி உங்களுக்கு ராஜகுருவா இருந்தா உங்க பர்சனலாக வச்சுக்கணும். ஆனால் அவரை அரசு உயர் பதவியில் கொண்டு வந்து இளைஞர்களை நம்பி மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். இந்த இளைஞர்களுக்கு நீங்கள் என்ன உதாரணத்தைச் சொல்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர், “முதலமைச்சர் அன்னைக்கு சொன்னாரு, ‘இங்க முகம் மூடி யாரும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அனைவருக்கும் ஒரு வெளிப்படையான ஆட்சிதான் செய்வோம்’ என்று. அப்படி இருக்கையில் முதல்வர் அவர்களைச் சந்திக்க யார் முகத்தை மூடிக்கொண்டு அன்று வாகனத்தில் சென்றார்கள் என்பதை நிச்சயமாக மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.
ஏன்னா அதற்கு காரணம் குதிரை பேரம் என்றால் இதைவிட ஒரு தலைகுனிவு இந்த வரலாற்று சிறப்பு மிக்க அவையில் எதுவுமே கிடையாது. நிச்சயம் முதல்வர் அதற்குப் பதில் சொல்வார் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
தமிழ்நாட்டில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் 120க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களின் பலத்துடன் ஆட்சி அமைத்துள்ளது. இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
