சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையிலான அரசுக்கு ஆதரவளித்துள்ள அதிமுக பிரிவினரிடம் இருந்து எந்தவித நிபந்தனையும் இல்லாத ஆதரவு வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இன்று வெளியிட்ட அறிக்கையில் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளதாவது:“தமிழக அரசில் எந்தவித குதிரைப் பேர அரசியலும் இல்லை என்பதை முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். மதச்சார்பற்ற வெற்றிக் கூட்டணியில் இணைந்த கட்சிகள் எவ்வாறு ‘நிபந்தனை இல்லாத ஆதரவு’ என்று வெளிப்படையாக அறிவித்தார்களோ, அதேபோல் அதிமுகவில் இருந்து பிரிந்து வந்தவர்களும் தங்களின் ஆதரவை எந்த நிபந்தனையும் இல்லாமல் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
அப்போதுதான் குதிரைப் பேரம் நடைபெறவில்லை என்பதை மக்கள் நம்புவார்கள்.மேலும், ‘முகத்தை மூடிக்கொண்டு முதலமைச்சரைச் சந்தித்தவர் யார்?’ என்பதையும், அதற்குப் பின்னர் எந்தவிதமான குதிரைப் பேரமும் நடைபெறவில்லை என்பதையும் மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்” என்று தேமுதிக சார்பில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரேமலதா விஜயகாந்த் ஏற்கனவே சட்டப்பேரவையில் இதே விவகாரத்தை எழுப்பியிருந்தார். அப்போது முதலமைச்சர் ஜோசப் விஜய், “குதிரை போல் வேகமாக அரசு செயல்படும், ஆனால் குதிரைப் பேரம் எதுவும் இல்லை” என விளக்கம் அளித்திருந்தார்.
எனினும், தேமுதிக தரப்பில் இந்த விவகாரம் தொடர்ந்து உறுதியாக எழுப்பப்பட்டு வருகிறது. தவெக அரசுக்கு ஆதரவு அளித்துள்ள அதிமுக பிரிவினரின் ஆதரவு முழுக்க வெளிப்படையானதா என்பது குறித்து எதிர்க்கட்சிகள் மத்தியில் தொடர்ந்து சந்தேகம் எழுப்பப்பட்டு வரும் நிலையில், பிரேமலதா விஜயகாந்தின் இந்தக் கோரிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
