சென்னை : முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் கலைஞரை நினைவுகூர்ந்து உருக்கமான பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "தலைவரின் பிறந்தநாள், தமிழினத் தலைவரின் பிறந்தநாள்" என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், கலைஞரின் அர்ப்பணிப்பு வாழ்க்கையையும், தமிழர் நலனுக்காக அவர் ஆற்றிய பணிகளையும் நினைவுகூர்ந்துள்ளார்.
"மூப்படைந்து சக்கர நாற்காலியில் அமர்ந்த பின்னரும் ஓய்வின்றி உழைத்தவர் கலைஞர். தனது இறுதி மூச்சு வரை தமிழினத்தின் முன்னேற்றத்திற்காகவும், தமிழ்நாட்டு மக்களின் உயர்விற்காகவும் பாடுபட்ட உன்னத தலைவர் அவர்" என்று ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும், "என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர். வெற்றியால் கர்வமும் கொள்ளாமல், தோல்வியால் துவளாமல், பல சோதனைகளை கடந்து வந்த உங்கள் மனவலிமையே எனக்கும் வழிகாட்டியாக உள்ளது. நீங்கள் எங்களுடன் இருந்தபோது, உங்கள் ஆற்றலை நான் வேண்டினேன். அந்த ஆற்றலோடு பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தேர்தல் தோல்வியையும் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின், "இந்த முறை வெற்றிக்கான வாய்ப்பை இழந்திருந்தாலும், கலைஞரின் ஆற்றலும் கொள்கைகளும் என்னிடம் மட்டுமல்ல, அவர் உருவாக்கிய ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
இறுதியாக, "மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம். உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்" என்று உறுதியுடன் பதிவிட்டுள்ளார்.
மு.க.ஸ்டாலினின் இந்த பதிவு, திமுக தொண்டர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், தேர்தல் தோல்விக்குப் பிறகும் கட்சியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்வோம் என்ற அரசியல் செய்தியையும் வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது
