திமுக மீது மக்களுக்கு இருக்கும் வெறுப்பை நாம் கண்கூடாகக் கண்டோம் - எடப்பாடி பழனிசாமி!

ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்களுக்கும், தேர்தல் பணியாற்றிய அதிமுக, தேஜ கூட்டணியினருக்கு நன்றி தெரிவித்த எடப்பாடி பழனிசாமி.

Hero Image

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஜனநாயகக் கடமையை ஆற்றிய வாக்காளர்களுக்கும், தேர்தல் பணியாற்றிய அதிமுக – தேசிய ஜனநாயகக் கூட்டணியினருக்கும் நன்றி தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமி.தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற்ற நிலையில், அதிமுக தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:“தமிழகத்தில் நல்லாட்சி மலர வேண்டும் என்பதற்காக, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காலை 7 மணி முதல் மாலை வரை வரிசையில் நின்று, தமிழக வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவில் மிக அதிகமான வாக்குப்பதிவை உறுதி செய்துள்ள தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இரவு, பகல் பாராமல், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்குப்பதிவு நாள் வரை சுற்றிச் சுழன்று பணியாற்றிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், பாட்சி பாரதம், இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட நமது கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளுக்கும், ஆதரவு அளித்த கட்சித் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், ஆதரவு அளித்த அனைத்து அமைப்புகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்த மாண்புமிகு பாரதப் பிரதமர், மாண்புமிகு மத்திய அமைச்சர்கள், பிற மாநில முதலமைச்சர்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்று வரும் நிர்வாகத் திறனற்ற திமுக அரசின் மீது மக்களுக்கு இருக்கும் வெறுப்பை நாம் கண்கூடாகக் கண்டோம். விரக்தியின் விளிம்பில் உள்ள திமுகவினர், எப்படியாவது புறவாசல் வழியாக ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற எண்ணத்தோடு, அதற்கான முயற்சிகளை இந்தத் தேர்தலிலும் எடுப்பதற்குத் தயாராக உள்ளனர்.

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23, 2026 அன்று முடிவடைந்துள்ள நிலையில், வரும் மே 4, 2026 அன்று வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளது. இதற்காக, அதிமுக சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் முகவர்களாக நியமிக்கப்பட்டுள்ள அனைவரும் மிகுந்த சுவனத்துடனும், விழிப்புணர்வுடனும் பணியாற்றி, வெற்றிக் கனியை சிந்தாமல், சிதறாமல் பெற்று கழகத்திற்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் சமர்ப்பிக்கும் வகையில் பணியாற்ற வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.