நாங்கள் கூட்டணிக்கு அலைந்ததாக வரலாறே கிடையாது...செல்லூர் ராஜு ஸ்பீச்!

எங்கள் கொள்கையோடு எங்களுக்கு துணையாக மக்களை காப்பாற்ற யார் வந்தாலும் அவர்களை தூக்கி கொண்டாடுவோம் என செல்லூர் ராஜு பேசியுள்ளார்.

sellur raju

மதுரை :காமராஜர் சாலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) 54-ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜு தலைமையில் அக்டோபர் 24 அன்று நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய ராஜு, அதிமுக கூட்டணிகளைப் பற்றி தெளிவுபடுத்தினார். “நாங்கள் கூட்டணிக்கு அலைந்ததாக வரலாறே கிடையாது. அதிமுக எந்தக் காலத்திலும், சூழ்நிலையிலும் யாரையும் வம்படியாக அழைத்தது இல்லை. எங்கள் கொள்கையோடு துணையாக மக்களை காப்பாற்ற யார் வந்தாலும், அவர்களை தூக்கி கொண்டாடுவோம்” என்று கூறினார்.

அதிமுக யாருக்கும் துரோகம் செய்யவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார். ராஜு, அதிமுகவின் வளர்ச்சியைப் பற்றி பெருமையுடன் பேசினார். “பல கட்சிகளில் வயதானவர்கள் தான் இருப்பார்கள், ஆனால் அதிமுகவில் இளைஞர்கள் தான் வந்து கொண்டே இருக்கிறார்கள். 31 ஆண்டு அதிமுக ஆட்சியில் சாதாரண மக்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பெண்கள் அனைவருக்கும் வாய்ப்பளித்தோம். பிரிந்த இயக்கம் ஒன்று சேர்ந்து இந்தியாவின் மிகப்பெரிய கட்சியாக மாறியது” என்று கூறினார்.

எம்ஜிஆர் படுத்துக்கொண்டே வெற்றி பெற்றவர் என்று பாராட்டி, “தாலிக்கு தங்கம் திட்டத்தை திமுக மூடி வைத்தது” என்று விமர்சித்தார். திருமாவளவன் தனது நற்பெயரைத்தானே கெடுத்துக்கொண்டார் என்றும் கூறினார். எடப்பாடி கே. பழனிசாமி (ஈபிஎஸ்) மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்று ராஜு உறுதியளித்தார். “அப்போது கூட்டுறவுத் தேர்தல் நடத்தப்படும். திமுக ஆட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை கூட கைவிட்டனர். ஸ்டாலின் வாய் கூசாமல் பேசுகிறார், அதிமுக பேசியதை நான் பட்டியலிட்டு பேசுவேன். மதுரையை நவீனமயமாக்கியவர் ஈபிஎஸ்” என்று புகழ்ந்தார்.

மேலும், உலகம் போதைப்பொருள் கடத்தும் மாநிலமாக தமிழ்நாடு மாறியது, மாணவர்கள் கூட போதைமயமாக உள்ளனர் என்று திமுகவை சாடினார். மதுரைக்கு 2 அமைச்சர்கள் இருந்தும் வளர்ச்சி இல்லை என்று குற்றம்சாட்டினார். மதுரை மாநகராட்சியில் ஊழல், மேயர், மண்டலத் தலைவர்கள், அதிகாரிகள், மேயரின் கணவர் ராஜினாமா, கைது ஆகியவை ஏற்பட்டுள்ளன என்று ராஜு சாடினார்.

“ஊழலை ஒழிக்கவே உருவாக்கப்பட்ட கட்சி அதிமுக. கேள்வி கேட்பதற்காகவே உருவாக்கப்பட்டது. அதிமுக சாதனை செய்யாத இயக்கமா? ஒன்றும் செய்யாத இயக்கமா? மக்களிடம் கேளுங்கள்” என்று கூறினார். உதயநிதி ஸ்டாலினை யாரும் தலைவராக ஏற்கவில்லை, திமுக 2026-ல் ஆட்சிக்கு வந்தால் நாட்டைக் காப்பாற்ற முடியாது என்று எச்சரித்தார்.