மக்கள் வெள்ளத்தில் ஊர்ந்து செல்லும் பிரச்சார வாகனம்.. விஜய் முன் ஆரவாரம் செய்யும் தொண்டர்கள்.!

தவெக தலைவர் விஜய் வளையப்பட்டி பகுதிக்கு வந்துள்ள நிலையில் பேருந்தை சூழ்ந்து தொண்டர்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர்.

tvk vijay

நாமக்கல் :தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (செப்டம்பர் 27, 2025) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் தனது தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்தடைந்தார். நாமக்கல்லில் காலை முதல் கே.எஸ். திரையரங்கம் அருகே தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் குவிந்தனர்.

முதலில், நாமக்கல்லில் பரப்புரை மேற்கொள்வதற்காக தவெக தலைவர் விஜய் இன்று காலை திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக நாமக்கல் நோக்கி புறப்பட்டு சென்றார். அவரை அலைகடலென திரண்ட தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். நாமக்கலில் கே.எஸ். திரையரங்கம் அருகே காலை 8:45 மணிக்கு பிரசாரம் செய்யவுள்ளார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ மட்டுமே நகர்ந்துள்ள விஜயின் வாகனம், தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் சாலையெங்கும் குவிந்துள்ளதால், கடும் போக்குவரத்து நெரிசலுக்கு இடையே ஊர்ந்தவாறு செல்கிறது. இதனால், விஜய் பரப்புரையை திட்டமிட்டபடி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஆம், விஜய் பிரசாரத்திற்கு நாமக்கல் காவல்துறை அளித்த நேரம் கடந்த‌து. அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்தும் பிரசார பகுதிக்கு விஜய் வராத நிலை ஏற்பட்டுள்ளது. இப்பொது, சேலம் பிரிவு சாலையில் தவெக தொண்டர்களும் பொதுமக்களும் குவிந்து வருகின்றனர், இதனால் திருச்சி – திருச்செங்கோடு -சேலம் சந்திப்பு சாலையில் போக்குவரத்து முடங்கியது.

நகரின் முக்கிய சாலையில் போக்குவரத்து முடங்கியதால் மாற்று வழித்தடத்தில் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாமக்கல்லில் பிரச்சாரத்தை முடித்த பின்னர், பரமத்திவேலூர் வழியாக கரூருக்கு சென்று பிற்பகல் 3 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, கரூர், வேலுச்சாமிபுரத்தில் இன்று பிற்பகலில் விஜய் பிரசாரம் செய்யாவுள்ள நிலையில், வேலுச்சாமிபுரம் சாலையில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.