விஜயின் பிரச்சார பயணம் தொடரும்...த.வெ.க CTR நிர்மல் குமார் தகவல்!

எவ்வளவு பெரிய நெருக்கடி வந்தாலும் எதிர்கொள்வோம் என த.வெ.க இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

CTR Nirmal Kumar

சென்னை :தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமை நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று (அக்டோபர் 29, 2025) காலை பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது. கடந்த மாதம் கரூரில் நடந்த பிரசாரக் கூட்ட நெரிசலில் 41 உயிர்கள் பறிபோன சோகத்திற்குப் பிறகு, கட்சியின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. இன்றைய கூட்டத்தில் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் எதிர்காலப் பணிகள், தேர்தல் தயாரிப்பு, பிரசாரத் திட்டங்கள் ஆகியவை விவாதிக்கப்பட்டன.

கூட்டத்துக்குப் பின் இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். கரூர் விபத்து நடந்த உடனேயே தலைவர் விஜய் உயிரிழந்தோர் குடும்பங்களைச் சந்திக்க முயன்றதாகவும், ஆனால் போலீசார் அனுமதி மறுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். சமீபத்தில் மாமல்லபுரத்தில் 37 குடும்பங்களைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்டோரை விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இது தனிப்பட்ட சந்திப்பு என்பதால் அரசியலாக்க விரும்பவில்லை என CTR தெரிவித்தார்.

பிரசாரப் பயணம் தொடரும் என்றும், ஆனால் அனுமதிக்காகக் காத்திருப்பதாகவும் அவர் கூறினார். உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பொதுவான இயக்க நடைமுறை விதிகள் (SOP) வரையறுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றம் 10 நாள் அவகாசம் வழங்கியுள்ளது. SOP வந்த பிறகே பிரசாரத் திட்டங்கள் முழு வீச்சில் தொடங்கும் என அவர் உறுதியளித்தார்.

கரூர் செல்ல முயன்ற போது கட்சி நிர்வாகிகள் தாக்கப்பட்டதாகவும், கொடி ஏற்றிய வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை எனவும் CTR குற்றம்சாட்டினார். இதனால் உடனடியாக சென்னை திரும்பி உயர்நீதிமன்றத்தை நாடியதாகக் கூறினார். கட்சியை முடக்க நினைப்பவர்களின் முயற்சி பலனளிக்காது என்றும், மக்கள் தலைவர் விஜய் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மிகுந்த உருக்கத்துடன் பேசிய CTR, 41 உயிரிழப்புகளே கட்சிக்கு ஈடு செய்ய முடியாத துயரம் என்றார். எவ்வளவு பெரிய நெருக்கடி வந்தாலும் எதிர்கொள்ளத் தயார் என்றும், ஆனால் இந்த இழப்பு மட்டும் மீள முடியாத வடு என்றும் குறிப்பிட்டார். கூட்டணி நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும், ஒரு மாதத்திற்கு முன்பு இருந்த அதே நிலைப்பாடே தொடர்கிறது என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.