2 ஆண்டுகளை நிறைவு செய்த தவெக – அறிக்கை வெளியிட்ட விஜய்!

இரண்டு ஆண்டுகளை இயல்பாகவும், இயல்பு தாண்டியும் நிறைவு செய்து, நீள்கிறது நம் அரசியல் பெரும் பயணம் என விஜய் தெரிவித்துள்ளார்.

TVK Vijay

சென்னை :தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், கட்சித் தலைவர் நடிகர் விஜய் சிறப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். “இரண்டு ஆண்டுகளை இயல்பாகவும், இயல்பு தாண்டியும் நிறைவு செய்து, நீள்கிறது நம் அரசியல் பெரும் பயணம்” என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். கட்சி தொடங்கிய நாள் முதல் இன்று வரை பெற்ற ஆதரவு, தொண்டர்களின் உழைப்பு, மக்களின் நம்பிக்கை ஆகியவை இந்த பயணத்தை வெற்றிகரமாக்கியுள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.

எக்ஸ் வளைத்தள பக்கத்தில் “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு, வணக்கம். நம் உயிரனைய இயக்கமான தமிழக வெற்றிக் கழகத்தின் மகிழ்ச்சிகரமான மூன்றாம் ஆண்டு, இன்று தொடங்குகிறது. இரண்டு ஆண்டுகளை இயல்பாகவும், இயல்பு தாண்டியும் நிறைவு செய்து, நீள்கிறது நம் அரசியல் பெரும்பயணம்.

முதன்மை அரசியல் சக்தியாகப் பரிணமிக்கும் முன்பே மக்கள் இயக்கமாக, மக்களோடு மக்களாகக் கலந்து நின்றவர்கள் நாம். இதை நாடறியும். நல்லவர்கள் அறிவார்கள். ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். சலனங்களைப் புறந்தள்ளி, சமநிலை தவறாத, அளக்கவியலாத ஆழ்கடல் த.வெ.க.; எவராலும் விலக்க இயலாத விரிவானம் த.வெ.க.; அத்தனை இலக்குகளையும் அர்ப்பணிப்புடன் வெல்லும், சாமானிய மக்களுக்கான அதிகார அரசியலின் வெற்றிப் போர்முரசம் த.வெ.க.

2026 சட்டமன்றத் தேர்தல் களம், இதுவரை இல்லாத புதிய சூழலைச் சுமந்து நிற்கிறது. இதற்கு ஒரே காரணம் நமது அரசியல் வருகை மட்டுமே என எல்லோரும் சொல்கின்றனர். எனவே இச்சூழலில், களத்தை நமதாக்கி, தேர்ந்த தெளிவுடனும் திறன்மிக்க நுட்பத்துடனும் தேர்தல் அரசியல் வெற்றியின் வாயிலாக, அதிகார அரசியல் அங்கீகாரம் நோக்கிச் செல்வோம். அனைத்து மக்களின் அமோக ஆதரவுடன், தீர்க்கமுடன் ஒற்றுமையாகக் களமாடி, ஆட்சி பீடத்தைக் கைக்கொள்ளும் ஜனநாயக இலக்கை உறுதியாக வெல்வோம்”