முந்தைய ஆட்சியின் நலத்திட்டங்கள் தொடரும் என்றார் விஜய் - காதர் மொய்தீன்!

5 ஆண்டுகளுக்கு ஆதரவு... 3 ஆண்டுகளுக்கு ஆதரவு என்றெல்லாம் நாங்கள் நிபந்தனை போடவில்லை என காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.

Hero Image

சென்னை: தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய், இரண்டாவது நாளாக அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறார்.

இன்று சட்டப்பேரவை அலுவல் பணிகள் முடிந்ததும், மண்ணடியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (ஐயூஎம்எல்) அலுவலகத்துக்கு சென்ற முதலமைச்சர் விஜய்க்கு, கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்ட தலைவர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.சந்திப்பின்போது, தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்ததற்காக முதலமைச்சர் விஜய், ஐயூஎம்எல் தலைவருக்கு நன்றி தெரிவித்தார்.

இரு தரப்பினரும் சுமார் 20 நிமிடங்கள் உரையாடினர்.சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த காதர் மொய்தீன், “5 ஆண்டுகளுக்கு ஆதரவு... 3 ஆண்டுகளுக்கு ஆதரவு என்றெல்லாம் நாங்கள் நிபந்தனை போடவில்லை. ஆட்சி அமைப்பதற்கும் தொடர்வதற்கும் ஆதரவு அளித்திருக்கிறோம்.

இந்த ஆட்சி நல்லதாக இருக்கும் என்றும், முந்தைய ஆட்சியின் நலத்திட்டங்கள் தொடரும் என்றும் நம்புகிறோம். அதை அப்படியே விஜயும் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்” என்றார்.

ஏற்கனவே, முதலமைச்சர் விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரை ஏற்கெனவே அவர்களது இல்லங்களுக்கு நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தார். தவெக ஆட்சி அமைந்துள்ள சூழலில், முதலமைச்சர் விஜய் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளது.