சென்னை :எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ள ‘டெக்ஸா’ திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.சீமான் தனது பேட்டியில், விஜய் தலைமையிலான தவெக கட்சியின் கரூர் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழப்பு ஏற்பட்டது குறித்து பேசினார்.
“விஜய் கரூருக்கு போகலன்னா கூட்டம் இல்ல… கூட்டம் இல்லன்னா நெரிசல் இல்ல… நெரிசல் இல்லன்னா சாவு இல்லை. அப்போ முதன்மைக் காரணி யாரு? அவர்தான். தெரியாம நடந்துடுச்சு… அதுக்கு நானும் ஒரு பொறுப்பாகிட்டேன் என மக்கள் கிட்ட வருத்தத்தை தெரிவித்தால் முடிந்துவிடும்” என்று கூறினார்.மேலும், ஆளுநர் நிறுத்தி வைக்கும் அதிகாரம் குறித்து சீமான் விமர்சித்தார்.
“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒரு சட்டத்தை இயற்றும்போது, ஒரு தனி நபரான ஆளுநருக்கு அந்தச் சட்டத்தை முடக்கும் அதிகாரம் வழங்கப்படுவது சரியல்ல. கேரளா, மேற்கு வங்கம், தமிழ்நாடு போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களைக் கொண்டு மத்திய அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. இது ஆரோக்கியமான அரசியல் அல்ல” என்று அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளதாக சீமான் வலியுறுத்தினார். “திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பதில் மாற்றமில்லை. தன்னோடு யாரும் கூட்டணிக்கு வர மாட்டார்கள்” என்று கூறினார். வாக்குக்கு காசு கொடுக்காத அரசியல் பண்பாட்டை ஏற்கும் கட்சிகள் வந்தால் மட்டுமே கூட்டணி பற்றிச் சிந்திக்க முடியும் என்றும், காசு கொடுத்துப் பெறும் வெற்றி இழிவான அரசியல் என்றும் அவர் குறிப்பிட்டார்.
