சென்னை: முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இணையவிருப்பது தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தவெக தலைமையிலான அரசு, தனது அதிகாரப் பகிர்வில் கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்வது அரசியல் களத்தில் புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ ஷாஜகான் நாளை அமைச்சராகப் பதவியேற்க உள்ளார் என்பதை அந்த கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று காலை திமுக தலைவர் ஸ்டாலினிடம் பேசியதாகவும், அவரிடம் வாழ்த்துகளைப் பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஆட்சியில் குறைகள் ஏதேனும் இருந்தால் அதை சுட்டிக்காட்டுவோம் என்றும், வருங்காலத்தில் கூடுதலாக இரண்டு அமைச்சர் பதவிகளைக் கோருவோம் என்றும் அவர் உறுதியாகக் கூறியுள்ளார்.
மறுபுறம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தவெக அமைச்சரவையில் பங்குபெற முடிவெடுத்துள்ளது. இது தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனை என அக்கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி தெரிவித்துள்ளார். விசிக அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலைக்குள் வெளியாகும் என்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
பெரும்பான்மையான நிர்வாகிகள் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளதால், உயர்மட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி இன்னும் சற்று நேரத்தில் அதற்கான இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போதுள்ள சூழலில் தவெக அமைச்சரவையில் இரண்டு இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் வாய்ப்பளித்துள்ள நிலையில், தற்போது விசிக மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளையும் இணைத்துக்கொண்டுள்ள முதலமைச்சர் விஜய்யின் இந்த நடவடிக்கை, ஆட்சியை வலுப்படுத்தும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
