மதுரை :ஆகஸ்ட் 21, 2025 அன்று நடைபெற்று வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாட்டில், கட்சித் தலைவர் விஜய்யின் குரலில் உருவாகிய கொள்கைப் பாடல் வெளியிடப்பட்டது. “உங்க விஜய் வரேன்!”, “பெரியாரின் பேரன் வரான்!”, “எளியவர்களின் குரல்” போன்ற வரிகளுடன் கூடிய இந்தப் பாடல், தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. மாநாட்டு திடலில் லட்சக்கணக்கான தொண்டர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் இந்தப் பாடல் பின்னணியில் ஒலிக்க, விஜய் பிரத்யேக நடைமேடையில் (ரேம்ப்) தவெக கொடியை தலையில் கட்டிக்கொண்டு நடந்து வந்தார்.
தவெக மாநாட்டில் தொண்டர்களை கண்டதும் உணர்ச்சிப் பெருக்கில் ஆனந்தக் கண்ணீர் மல்கிய தலைவர் விஜய், கட்சிக் கொடியை ஏற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். மாநாடுக்கு வருகை தந்து மக்கள் கொடுத்த ஆதரவை பார்த்து விஜய் கொடுத்த ரியாக்சன் வைரலாகி வருகிறது . மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரபத்தி கிராமத்தில் 506 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட இந்த மாநாட்டு திடலில், விஜய்யின் வருகையும், அவரது உரையும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
காலை முதல் தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக குவிந்த நிலையில், மாநாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் உத்திகள் மற்றும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவெக கொள்கைப் பாடல், விஜய்யின் கம்பீரமான குரலில், கட்சியின் சமூக நீதி மற்றும் மக்கள் நலக் கொள்கைகளை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது. இந்தப் பாடல், தவெகவின் தொண்டர்களையும், பொதுமக்களையும் உற்சாகப்படுத்துவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாநாட்டு மேடையில் அண்ணா, எம்ஜிஆர் படங்களுடன் அமைக்கப்பட்டிருந்த பேனர்கள், தவெகவின் திராவிட பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தன. விஜய்யின் இந்த உணர்ச்சிமிகு வருகை, தொண்டர்களிடையே புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.மாநாட்டிற்கு முன்னதாக, தவெகவால் மருத்துவ முகாம்கள், குடிநீர் வசதிகள், மற்றும் ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இருப்பினும், குடிநீர் பற்றாக்குறை மற்றும் வெயில் காரணமாக சில தொண்டர்கள் மயக்கமடைந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன. விஜய்யின் உரையில், தவெகவின் எதிர்கால திட்டங்கள் மற்றும் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக கட்சியின் அர்ப்பணிப்பு குறித்து விரிவாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
