இது கவர்னர் உரை அல்ல, ரீல்ஸ் கன்டென்ட்...ஆளுநர் உரை குறித்து உதயநிதி ஸ்டாலின்!

இந்த ஆட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற கவலையில் முதலமைச்சர் இருக்கிறார். அதனால் MLA-க்களை pulling செய்து வருகின்றனர் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

Hero Image

சென்னை : தமிழக சட்டப்பேரவையின் புதிய கூட்டத்தொடர் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையுடன் தொடங்கிய நிலையில், அந்த உரையை கடுமையாக விமர்சித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.

சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுநர் உரை என்பது பொதுவாக அரசின் கொள்கைகள், தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் எதிர்கால திட்டங்களை விளக்கும் முக்கிய ஆவணமாக இருக்கும் என்றும், ஆனால் இந்த முறை அது ஆளுங்கட்சியின் சுயவிளம்பர உரையாக மாறியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

"ஆளுநர் உரை என்பது ஆளுநரின் தனிப்பட்ட கருத்து அல்ல. அரசே தயாரித்து வழங்கும் கொள்கை ஆவணம். தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றப் போகிறார்கள், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் என்ன என்பது குறித்து விளக்க வேண்டும். ஆனால் இன்றைய உரை, ஆளுங்கட்சியினர் ரீல்ஸ் போடுவதற்கான Content போல அமைந்துள்ளது. முதலமைச்சர் மற்றும் அவரது கட்சியைப் புகழ்ந்து பேசும் சுயபுராணமாகவே அந்த உரை இருந்தது" என்று உதயநிதி விமர்சித்தார்.

மேலும், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் ஆளுநர் பலமுறை அரசு தயாரித்த உரைகளில் மாற்றங்கள் செய்ததாகவும், சில பகுதிகளை வாசிக்க மறுத்ததாகவும் குறிப்பிட்ட அவர், தற்போது தவெக அரசு தயாரித்த உரையை ஆளுநர் எந்த மாற்றமும் இல்லாமல் முழுமையாக வாசித்திருப்பது பல கேள்விகளை எழுப்புவதாக கூறினார்.

இதன் அடிப்படையில், பாஜக மற்றும் தவெக இடையே மறைமுகமான அரசியல் புரிந்துணர்வு உருவாகியிருக்கிறதா என்ற சந்தேகம் பொதுமக்களிடையே எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேநேரத்தில், ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த பல திட்டங்கள் மற்றும் கொள்கைகள் கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களின் தொடர்ச்சியே என உதயநிதி கூறினார். இருமொழிக் கொள்கை, தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான நிலைப்பாடு, கல்வி நிதி கோரிக்கை, வறுமையற்ற தமிழ்நாடு இலக்கு, கீழடி அகழாய்வு, நீதித்துறையில் தமிழ் பயன்பாடு உள்ளிட்ட பல அம்சங்கள் திமுக அரசின் கொள்கைகளிலிருந்தே எடுக்கப்பட்டவை என அவர் வாதிட்டார்.

மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாடு பொருளாதார ரீதியாக முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தற்போதைய முதலமைச்சர் குறிப்பிட்ட பல சாதனைகளும் திமுக ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் விளைவு என்றும் தெரிவித்தார்.

"இந்த அரசு பொறுப்பேற்று ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. ஆனால் சொந்தமாக சொல்லிக்கொள்ளும் சாதனைகள் எதுவும் இல்லை. அறிவிக்கப்படும் பெரும்பாலான திட்டங்கள் அனைத்தும் முந்தைய திராவிட மாடல் அரசின் திட்டங்களின் தொடர்ச்சிதான். அதனால் இந்த அரசு Copy Paste அரசாகவும், Sticker அரசாகவும் செயல்பட்டு வருகிறது" என்று உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

இது கவர்னர் உரை அல்ல, ரீல்ஸ் கன்டென்ட்...ஆளுநர் உரை குறித்து உதயநிதி ஸ்டாலின்!