சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக மகளிர் அணி மற்றும் தொண்டரணி ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அண்மையில் டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டு திரும்பிய தமிழக முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகளையும், அவரது பேச்சுகளையும் மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சராகத் தாம் டெல்லிக்குச் சென்று தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகப் பேசியபோது, தற்போதைய முதலமைச்சர் விஜய் (அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது) தம்மைக் கடுமையாகத் தரம் தாழ்த்தி விமர்சித்ததாக மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
"அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காகத் தான் ஸ்டாலின் டெல்லிக்குச் செல்கிறார். பா.ஜ.க-வுடன் மறைமுகக் கூட்டணி வைத்துள்ளார். அதனால்தான் புகைப்பட வரிசையில் முன்னால் இடம் கொடுத்தார்கள்" என்று அன்று விஜய் பேசியதை ஸ்டாலின் இந்த மேடையில் நினைவு கூர்ந்தார். அதே பாணியில் தற்பொழுது கேட்க நினைத்தால், "கரூர் சிபிஐ வழக்கில் இருந்து தப்பிக்கத்தான் நீங்கள் டெல்லி சென்றீர்களா? பா.ஜ.க-வை விமர்சித்தால் ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என்று பயப்படுகிறீர்களா?" எனத் தாம் திருப்பி கேட்க முடியும் என்றும், ஆனால் தாம் அந்த அளவிற்குத் தரம் தாழ்த்தி விமர்சிக்க விரும்பவில்லை என்றும் கூறினார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பேசிய கோரிக்கைகள் அனைத்தும் ஏற்கனவே திமுக அரசு தயாரித்து வைத்திருந்த 'புளூபிரின்ட்' (Blue Print) மற்றும் கொள்கைக் குறிப்புகள் (Policy Note) போன்றே இருந்ததாக ஸ்டாலின் சாடியுள்ளார்.
மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை (Samagra Shiksha Funds) ஒன்றிய பா.ஜ.க அரசு நிறுத்தி வைத்து பிளாக்மெயில் செய்தபோது, "பாசிசமும் பாயாசமும் எல்கேஜி, யுகேஜி பசங்க மாதிரி சண்டை போடுறாங்க" என்று நக்கல் அடித்த விஜய், இப்போது டெல்லிக்குச் சென்று 'நிபந்தனைகள் இல்லாமல் கல்வி நிதியை விடுவிக்க வேண்டும்' என்று அதே கோரிக்கையைத் தான் வைத்துள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
திமுக ஆட்சியில் '2030-க்குள் 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம்' என்ற இலக்கை நிர்ணயித்ததை மாற்றி, "2036-க்குள் 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம்" என காருக்குப் பட்டி பார்ப்பது போல் பட்டி பார்த்து விஜய் பேசியுள்ளதாகக் கிண்டல் செய்த ஸ்டாலின், இருப்பினும் அந்த இலக்கிற்காகத் தனது வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.
ஆட்சி நிர்வாகத்தின் எதார்த்தங்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என முதலமைச்சருக்கு அறிவுறுத்திய மு.க.ஸ்டாலின், "மாநில உரிமைகள் சார்ந்த எதுவாக இருந்தாலும், திராவிட மாடல் அரசு போட்டுத் தந்த பாதையில் தான் யாராக இருந்தாலும் செயல்பட முடியும். ஏன்னென்றால் இது சினிமா இல்லை; ஆட்சி நிர்வாகம், அதைப் புரிந்துகொள்ள வேண்டும்" எனத் திட்டவட்டமாகப் பேசினார்.
மேலும், டெல்லி நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சரின் செயல்பாடுகள் குறித்துத் தாம் எழுப்பியுள்ள இந்த நியாயமான கேள்விகளை, மகளிர் அணியினர் மற்றும் தொண்டர்கள் அனைவரும் தமிழக மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்
