எங்களை அலுவலகத்தை போடவிடாமல் நிப்பாட்டுறாங்க- ஆதவ் அர்ஜுனா காட்டம்

இனிமே சேகர் பாபு வாழ்நாள் முழுக்க அமைச்சர் ஆக முடியாதுனு சொல்லுங்க என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

Hero Image


2026 சட்டமன்றத் தேர்தலில் சென்னையில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பெரும் வெற்றி பெறும் என்று தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா நம்பிக்கை தெரிவித்துள்ளார் . சென்னையில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் 13 தொகுதிகளில் தவெக வெற்றி பெறும் என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார். தவெக வேட்பாளர்கள் அனைவரும் வரும் 30ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


ஆதவ் அர்ஜுனா மேலும் கூறுகையில், “இனிமேல் வாழ்ந்த அளவுக்கு அமைச்சர் ஆக முடியாது, முதலமைச்சர் பதவியும் வந்து போய்விட்டது என்று சொல்லுங்கள். இப்போது தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறதோ, என்ன அறிவிப்பு இருக்கிறதோ அதைத்தான் நாங்கள் பின்பற்றுவோம். ஒவ்வொரு தொகுதியிலும் Returning Officer (RO) தான் அதிகாரம் கொண்டவர். RO-வை மீறி முதலமைச்சருக்கோ, அமைச்சர்களுக்கோ, E-MLA-வுக்கோ எந்த அதிகாரமும் இல்லை” என்றார்.


தவெக தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பணிமுனைகள் அமைக்க முயற்சிக்கும் போது திமுக தரப்பில் தொடர்ந்து இடையூறு செய்யப்படுவதாக ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டினார். “எங்களுக்கு ஆபீஸ் வேண்டாம் என்று சொன்னாலும் பரவாயில்லை. ஆனால், எங்கு ஆபீஸ் போட முயற்சித்தாலும் உடனே வந்து வெளியேற்றச் சொல்கிறார்கள். பத்திரப் பிரச்சனை, வருவாய்த் துறை, பதிவுத் துறை, HR&CE என்று பல்வேறு பிரச்சனைகளை கிளப்பி, 85 வயது முதியவர்களைக்கூட மிரட்டி, ரவுடித்தனம் செய்கிறார்கள். இது மிகவும் கண்டிக்கத்தக்கது” என்று அவர் வலியுறுத்தினார்.


மேலும், “மகாபலிபுரத்தில் மட்டுமே நாங்கள் கூட்டம் நடத்தியுள்ளோம். சென்னை நகரில் எந்த மண்டபத்துக்கும் அனுமதி கொடுக்கக் கூடாது என்று முதலமைச்சரும், அவரது குடும்பத்தினரும், அமைச்சர்களும் நேரடியாக போன் செய்து மிரட்டியுள்ளனர். தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்துக்கு வெளியே வரக்கூடாது என்ற அளவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இப்போது தேர்தல் அலுவலகம் கூட போட விடாமல் தடுக்கிறார்கள். இது அவர்களுக்கு ஏற்பட்ட பயத்தின் வெளிப்பாடு” என்று கூறினார்.


இறுதியாக ஆதவ் அர்ஜுனா, “எங்களுக்கு ஆபீஸ் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. தெரு தெருவாக, சாலை சாலையாக நடந்து பிரச்சாரம் செய்வோம். இந்த அராஜகத்தை மக்களிடம் எடுத்துச் சொல்வோம். தவெகவுக்கு எதிராக இத்தகைய செயல்களைச் செய்வது திமுகவின் பயத்தைத்தான் காட்டுகிறது. நாங்கள் இதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்” என்று உறுதியுடன் தெரிவித்தார்.

எங்களை அலுவலகத்தை போடவிடாமல் நிப்பாட்டுறாங்க- ஆதவ் அர்ஜுனா காட்டம்