சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. இந்தப் பட்டியலில் மாநில பாஜக தலைவர் கே. அண்ணாமலைக்கு எந்தத் தொகுதியிலும் சீட் ஒதுக்கப்படவில்லை.இந்த நிலையில், அண்ணாமலை இன்று ஒரு அறிக்கை வெளியிட்டு, பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வேட்பாளர்களுக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்வதாக அறிவித்துள்ளார்.
அண்ணாமலை தனது அறிக்கையில், “2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டுள்ள பாஜகவின் வெற்றி பெறும் வேட்பாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். ஊழல், செயலற்ற தன்மை மற்றும் திமுக அரசின் துரோகம் ஆகியவற்றால் சோர்ந்துபோன தமிழகத்தின் ஒவ்வொரு சகோதரரும் சகோதரியும் இவர்களுக்கு ஆதரவாக உள்ளனர்” என்று கூறியுள்ளார்.
மேலும், “எங்கள் மதிப்பிற்குரிய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்கு தலைமையின் கீழ், இந்தியா வலிமை, விரிவு மற்றும் தெளிவான நோக்கத்துடன் முன்னேறி வருகிறது. ஆனால், அதே நேரத்தில் தமிழகத்தை ஒரு தோல்வியுற்ற, அகந்தையான மற்றும் சுயநலமான திமுக அரசு பின்னுக்கு இழுத்து வருகிறது” என்று திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.
அண்ணாமலை தொடர்ந்து, “நான் ஒரு கட்சித் தொண்டனாக, பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வேட்பாளர்கள் அனைவருடனும் தோளோடு தோள் இணைந்து பணியாற்றுவேன். வரும் சட்டமன்றத் தேர்தலில் NDA 210 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதே எங்கள் இலக்கு” என்று உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
தன்னுக்கு சீட் வழங்கப்படாத போதிலும், பாஜகவின் தொண்டனாகவும், கூட்டணியின் வெற்றிக்காகவும் தீவிரமாக உழைப்பேன் என்று அண்ணாமலை அறிவித்திருப்பது, பாஜகவுக்குள் ஒரு ஒற்றுமைச் செய்தியாக பார்க்கப்படுகிறது.இன்று வெளியான 27 வேட்பாளர்கள் பட்டியலில் அண்ணாமலை இடம் பெறாதது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது இந்த அறிக்கை கட்சியின் உள் ஒற்றுமையை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.
