சென்னை:கரூர் வேலுச்சாமிபுரம் தவெக பிரச்சாரக் கூட்டத்தில் (செப்டம்பர் 27, 2025) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு தவெகவே பொறுப்பேற்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். இந்த துயரமான சம்பவம் நிகழ்ந்து 3 நாட்கள் ஆகியும் இன்னும் சோகம் தீராமல் இதனை பற்றிய செய்திதான் தலைப்பு செய்தியாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்த சம்பவம் குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தவெகவினர் திமுக மீது தவறான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். இந்த சம்பவத்தில் எந்தவித சதியும் நடந்ததற்கு ஆதாரம் இல்லை,” என்று திட்டவட்டமாக தெரிவித்தார். உடல்நிலை காரணமாக கரூருக்கு செல்ல முடியவில்லை என்று கூறிய வைகோ, தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் ‘புரட்சி வேண்டும்’ என்ற பதிவை, மகாகவி பாரதியின் வார்த்தைகளை தவறாகப் பயன்படுத்தியதாக கடுமையாக கண்டித்தார்.
வைகோ மேலும் கூறுகையில், “விஜய் ஆரம்பத்திலேயே வாகனத்தில் ஏறி கை அசைத்து ரசிகர்களை கலைந்து செல்ல வைத்திருந்தால், இந்த நெரிசல் தவிர்க்கப்பட்டிருக்கும். கூட்டத்தை ஒழுங்குபடுத்த தவெக தவறிவிட்டது. இதற்கு திமுகவை குறை சொல்வது நியாயமற்றது,” என்றார். ஆதவ் அர்ஜுனாவின் ‘அரசுக்கு எதிராக புரட்சி’ என்ற பதிவு, பொறுப்பற்ற முறையில் பொதுமக்களை தூண்டுவதாக உள்ளது என்று வைகோ விமர்சித்தார். “பாரதியின் வார்த்தைகளை இப்படி தவறாக பயன்படுத்துவது அவரது மதிப்பைக் குறைக்கும் செயல்,” என்று அவர் கூறினார்.
மேலும், இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்க வேண்டியது தவெகவின் நிர்வாகிகள் என்று வலியுறுத்திய வைகோ, “கூட்டத்தை கட்டுப்படுத்துவது கட்சியின் கடமை. தவெகவினர் இதில் தோல்வியடைந்து, பிறரை குற்றம் சாட்டுவது ஏற்கத்தக்கது அல்ல,” என்றார். இந்த விமர்சனம், தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையேயான அரசியல் பதற்றத்தை மேலும் உயர்த்தியுள்ளது. இதற்கிடையில், விஜய் திருச்சியில் பாதுகாப்பாக உள்ளதாகவும், தவெக தொண்டர்கள் ஆதரவு கூட்டங்களை திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன என்பதும் குறிப்பிடதக்கது.
