சென்னை : அதிமுகவில் நீடித்து வந்த உள்கட்சி மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தகுதி நீக்க மனுக்களை இரு தரப்பினரும் வாபஸ் பெற்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுகவில் பிளவு எதுவும் இல்லை, கருத்து வேறுபாடு மட்டுமே இருந்தது; அது தற்போது நீங்கிவிட்டது” என்று கூறினார்.
சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்த பின்னர் கட்சியின் செயல்பாடு, தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆலோசிக்க வேண்டும் என்ற நோக்கில்தான் சில கோரிக்கைகளை முன்வைத்ததாக அவர் விளக்கம் அளித்தார். “பொதுக்குழுக் கூட்டம் நடத்த வேண்டும், கட்சிக்குள் குழுக்கள் அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்ற கருத்துக்களை நாங்கள் வைத்திருந்தோம். அவற்றை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரிசீலிப்பதாக உறுதி அளித்துள்ளார்” என்றார்.
மேலும், “அண்ணன் அக்குரி கிருஷ்ணமூர்த்தி எங்கள் 25 பேருக்கு மேல் தகுதி நீக்க மனு கொடுத்திருந்தார். அதேபோல் நாங்களும் சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் சார்பில் அவர்களது அணியினருக்கு எதிராக மனு கொடுத்திருந்தோம். தற்போது இரு தரப்பினரும் அந்த மனுக்களை வாபஸ் பெற்றுவிட்டோம்” என்று தெரிவித்தார்.
அதிமுக என்பது தங்களுக்கெல்லாம் உயிர் போன்ற கட்சி என்றும், “நான், சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், விஜயபாஸ்கர், தங்கமணி உள்ளிட்ட அனைவருமே கட்சி தொடங்கிய காலம் முதல் குடும்பமாக இருந்து வருபவர்கள். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், அம்மாவும் வளர்த்த கட்சி இது. அதனால் கட்சியை வலுப்படுத்துவதே எங்களது நோக்கம்” என்றும் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
பதவிக்காகவே இந்த பிரச்சினைகள் ஏற்பட்டதாக பரப்பப்பட்ட தகவல்களை மறுத்த அவர், “எங்களிடம் யாரும் பதவி கேட்டு வரவில்லை. தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியை எப்படி பலப்படுத்துவது என்ற ஆலோசனைகள்தான் முன்வைக்கப்பட்டன. இப்போது ஒற்றுமையாக செயல்பட்டு அதைச் சரி செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது” என்றார்.
இனி அதிமுக ஒற்றுமையுடன் செயல்படும் என்றும், “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும் அம்மாவும் நினைத்த பாதையில் கட்சியை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்லவே அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம்” என்றும் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
