திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது - அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்!

குடியரசு தலைவர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதற்காகவே தவெகவை ஆதரிக்க கூட்டணி கட்சியினரை வழியனுப்பி வைத்தேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Hero Image

சென்னை : தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பான திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. ஒருபுறம் புதிய கட்சிகளின் வரவும், மறுபுறம் பிரதான கட்சிகளுக்குள் நடக்கும் உட்கட்சிப் பூசல்களும் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் விழா ஒன்று நடைபெற்றது.

காஞ்சிபுரம் வடக்கு மற்றும் செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட அதிமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் தங்களை அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைத்துக் கொண்டனர். இதில் குறிப்பாக, பல ஆண்டுகாலம் அதிமுகவில் விசுவாசமாகப் பணியாற்றி, இரண்டு முறை தேர்தல் களத்தில் நின்ற முக்கிய முகமான 'கஜா' என்கிற கஜேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் ஐக்கியமானது காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய நிர்வாகிகளை வரவேற்றுப் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தற்போதைய அரசியல் சூழலைச் சுட்டிக்காட்டி சில முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

விழாவில் பேசிய அவர் "பொதுவாக, ஒரு இயக்கத்தில் இருந்து மக்கள் வெளியேறுகிறார்கள் என்றால் ஏதோ ஒரு லாபத்தை அடிப்படையாக வைத்தோ, அல்லது ஆளுங்கட்சியை நோக்கியோதான் போவார்கள். அதைத்தான் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இன்றைக்கு திமுக ஆளுங்கட்சி அல்ல, எதிர்க்கட்சியாக இருக்கிறது.

எதிர்க்கட்சியை நோக்கி நீங்கள் இவ்வளவு பேர் வருகிறீர்கள் என்றால், பதவிக்காகவோ சொகுசாக வாழ வேண்டும் என்பதற்காகவோ வரவில்லை. இழந்திருக்கக்கூடிய ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வோடு, பணியாற்ற வந்திருக்கிறீர்கள்!" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

மேலும், மேடையில் பேசிய அதிமுக முன்னாள் வேட்பாளர் கஜேந்திரனின் கடந்தகால உழைப்பைப் பாராட்டிய ஸ்டாலின், "எந்தக் கட்சியில் இருந்தாலும் விசுவாசமாக இருக்க வேண்டும். அதிமுகவில் விசுவாசமாக இருந்த கஜேந்திரன், இனி திமுகவிலும் விசுவாசமாகப் பணியாற்றுவார் என நம்புகிறேன்" என்றார்.

இந்த விழாவின் மிக முக்கியமான ஹைலைட்டே, டெல்லி ஆட்சி குறித்து மு.க.ஸ்டாலின் வெளிப்படையாகப் பேசிய விவகாரம்தான். அதாவது "ஜனாதிபதி ஆட்சியைத் தடுக்கவே திமுக கூட்டணி கட்சிகள் தற்போதைய (தவெக) ஆட்சிக்கு ஆதரவளித்திருக்கின்றன. நம் தொண்டர்களின் உழைப்பால் வென்ற கூட்டணி கட்சிகளின் தயவில்தான் தற்போதைய ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்" என்று ஸ்டாலின் பேசினார்.

திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது - அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்!