தி.மு.க-வுக்குத் தொடரும் அதிர்ச்சி...கூட்டணியிலிருந்து வெளியேறியது CPI!

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காகத் த.வெ.க அரசுக்கு வெளிப்புற ஆதரவு அளித்த கம்யூனிஸ்ட்கள், தற்போது தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளது.

Hero Image

சென்னை : தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழல், நாளுக்கு நாள் யாரும் எதிர்பாராத புதிய திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. அதன் உச்சகட்டமாக, நீண்ட காலமாகத் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்து வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI), அக்கூட்டணியில் இருந்து முற்றிலுமாக வெளியேறிவிட்டதாக அதிரடியாக அறிவித்துள்ளது.

கோவை மாவட்டம் நீலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் இந்த முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை வெளியிட்டார். கடந்த இரண்டு நாட்களாகக் கட்சியின் உயர்மட்டக் குழுவினருடன் நடத்தப்பட்ட தீவிர ஆலோசனைக்குப் பிறகே இந்த இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

செய்தியாளர்கள் மத்தியில் பேசிய மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், தங்களின் நிலைப்பாட்டை மிகவும் திட்டவட்டமாகப் பதிவு செய்தார்:

"கடந்த இரண்டு நாட்களாக எங்களது கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் விரிவான ஆலோசனைகளை நடத்தினோம். அதன் அடிப்படையில், தற்போது தமிழ்நாட்டில் நிலவி வரும் அரசியல் சூழலில், இனிவரும் காலங்களில் தி.மு.க கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நீடிக்கவோ, இடம் பெறவோ இயலாது என்ற இறுதி முடிவுக்கு வந்துள்ளோம்." என தெரிவித்தார்.

சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக அரசியல் களம் முற்றிலும் மாறியுள்ளது. குறிப்பாக, தமிழக வெற்றி கழகம் (TVK) ஆட்சி அமைக்கும் சூழல் உருவான போது, தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இருந்து போட்டியிட்ட இடதுசாரி கட்சிகள் (CPI மற்றும் CPI(M)), மாநிலத்தில் ஒரு நிலையான அரசு அமைய வேண்டும் என்பதற்காகத் தமிழக வெற்றி கழக அரசுக்கு நிபந்தனையற்ற வெளிப்புற ஆதரவை வழங்கியிருந்தது.

அதனைத்தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்த சூழலில், "மாநிலத்தில் நிலையான ஆட்சி அமையவே த.வெ.க அரசை வெளிப்புறமாக ஆதரிக்கிறோமே தவிர, நாங்கள் தி.மு.க கூட்டணியை விட்டு வெளியேறவில்லை" என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் தொடர்ந்து விளக்கம் அளித்து வந்தனர்.

எனினும், த.வெ.க அரசுக்கு இடதுசாரிகள் ஆதரவு கொடுத்த பிறகு, தி.மு.க-விற்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இடையே அரசியல் ரீதியாகப் பெரும் முரண்பாடுகளும், கடுமையான சங்கடங்களும் நீடித்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த மறைமுகக் கசப்புணர்வே தற்போது பகிரங்கமான கூட்டணி முறிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் கிசு கிசுக்கப்படுகிறது.

ஏற்கனவே, தி.மு.க கூட்டணியில் இனி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI-M) நீடிக்காது என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இப்படியான சூழலில், இப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வெளியேறியுள்ளதால், தி.மு.க-வின் மிக முக்கிய கூட்டணிக் கட்டமைப்பு முழுமையாக உடைந்துள்ளது.

தி.மு.க-வுக்குத் தொடரும் அதிர்ச்சி...கூட்டணியிலிருந்து வெளியேறியது CPI!