அரசு 6 இலவச சிலிண்டர்கள் வழங்க ஈரானை கைபற்றனும்...தவெகவை சாடிய சீமான்!

தோல்விக்குத் துவள மாட்டோம் எனவும் 2029-லும் தனித்துப் போட்டி என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.

Hero Image

சென்னை : முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசின் இலவச திட்டங்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக, “6 இலவச சிலிண்டர்கள் வழங்க வேண்டுமெனில் ஈராக், ஈரான் போன்ற நாடுகளை கைப்பற்ற வேண்டும்” என்று அவர் பேசியது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேச்சின் ஆரம்பத்திலேயே, “உணவு விஷமாகிவிட்டது, காற்று நஞ்சாகிவிட்டது, நீர் விஷமாகிவிட்டது. உயிருக்கு தேவையான மூன்றும் நஞ்சாகிவிட்டது. இப்படிப்பட்ட சூழலில் நம் பிள்ளைகளை விட்டுச் செல்லப்போகிறோமா?” என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும், “ஆட்சி மாறியிருக்கிறது. ஆனால் ஆட்சி முறை மாறுமா?” என்றும் பேசினார்.

மேலும், பேசிய சீமான், “தமிழகம் தற்போது மிகப்பெரிய கடன் சுமையில் உள்ளது. மாநிலத்திற்கு சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் தொடர்ந்து இலவச திட்டங்களை அறிவிப்பது நடைமுறைக்கு சாத்தியமில்லை” என்று கூறினார். அரசியல் கட்சிகள் மக்களிடம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்குகின்றன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், “தேர்தலுக்கு முன்பு பல திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகுதான் மாநிலத்தின் உண்மையான நிதி நிலைமை தெரிய வருகிறது. ஏற்கனவே வட்டிக்கே ஒரு லட்சம் கோடி ரூபாய் செல்கிறது. இந்நிலையில் 6 இலவச சிலிண்டர்கள் போன்ற திட்டங்களை எப்படி செயல்படுத்தப் போகிறார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “ஒருவேளை ஈரான் போன்ற எண்ணெய் வளமுள்ள நாடுகளை கைப்பற்றினால் தான் இத்தனை இலவசங்களை வழங்க முடியும்” என்று பேசினார். இந்த பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சிலர் அவரது பேச்சை ஆதரித்தாலும், மற்றொரு தரப்பு இது மிகைப்படுத்தப்பட்ட அரசியல் விமர்சனம் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மக்கள் மற்றும் அரசியல் குறித்து பேசும்போது, “மக்கள் அறிவுத் தலைமையை தேடுவதில்லை; கவர்ச்சியை நோக்கித்தான் ஓடுகிறார்கள்” என்றும், “கவர்ச்சியால் உருவாக்கப்பட்ட சமூகம் அறிவுச் சமூகத்தை உருவாக்காது” என்றும் சீமான் கூறினார்.

தனது நீண்டகால அரசியல் மற்றும் போராட்ட அனுபவங்களை குறிப்பிட்ட அவர், “நான் பங்கேற்காத போராட்டமே இல்லை. வெயில், மழை, பசி எல்லாம் கடந்து போராடியிருக்கிறோம். ஆனாலும் தொடர்ந்து நம்பிக்கையுடன் விதை போடும் விவசாயியைப் போல நாமும் போராடிக்கொண்டே இருக்க வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

அரசு 6 இலவச சிலிண்டர்கள் வழங்க ஈரானை கைபற்றனும்...தவெகவை சாடிய சீமான்!