சென்னை :அமமுகவின் (அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்) துணைப் பொதுச்செயலாளராக இருந்த எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா, இன்று (ஜனவரி 23) சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். இணைப்பு நிகழ்ச்சியில் திமுக மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மாணிக்கராஜாவுடன் 3 மாவட்டச் செயலாளர்களும் திமுகவில் இணைந்துள்ளனர்.திமுகவில் இணைவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகவே அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மாணிக்கராஜாவை கட்சியிலிருந்து நீக்கியிருந்தார். நீக்கத்திற்கு காரணமாக, “கழகத்தின் கொள்கை குறிக்கோள்கள், கோட்பாடுகள், கட்டுப்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டது, கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தியது, கழகக் கட்டுப்பாட்டை மீறி களங்கம் உண்டாக்கியது” என்று குற்றம் சாட்டப்பட்டது.
கழக உறுப்பினர்கள் இவருடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது. திமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாணிக்கராஜா, “அமமுக ஆரம்பிக்கப்பட்டதற்கு அர்த்தமே இல்லாமல் தலைமை முடிவு எடுத்ததால் திமுகவில் இணைந்தோம். எதற்காக அமமுக தொடங்கப்பட்டதோ, அதற்கு எதிராகவே இப்போது செயல்படுகிறது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இணைந்துள்ளோம். 3 மாவட்டச் செயலாளர்களும் இணைந்துள்ளனர். கூடிய விரைவில் அதிகமான நிர்வாகிகள் திமுகவில் இணைவார்கள்” என்று தெரிவித்தார். இந்த நிகழ்வு தமிழக அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அமமுக – பாஜக கூட்டணியில் இணைந்த பிறகு கட்சியில் ஏற்பட்ட உள் முரண்பாடுகள் இதன்மூலம் மீண்டும் வெளிப்பட்டுள்ளன. மாணிக்கராஜாவின் இணைப்பு திமுகவுக்கு புதிய வலிமையை அளிக்கும் என்றும், அமமுகவின் உள் பிளவை மேலும் தீவிரப்படுத்தும் என்றும் அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு இது போன்ற இணைப்புகள் தொடரும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
