சென்னை : செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்துக்கு ஏற்பட்ட அவமரியாதை மற்றும் மேகதாது விவகாரம் குறித்தும் அரசின் நிலைப்பாட்டைத் தெளிவாக விளக்கியுள்ளார்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்ட விவகாரம் குறித்துப் பேசிய அமைச்சர், "தமிழ்த்தாய் வாழ்த்து விஷயத்தில் ஆளுநர் தரப்பிலிருந்து பல்வேறு வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டு வருவது ஏற்புடையது அல்ல" என்று கண்டனம் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் எப்போதும் தமிழ்த்தாய் வாழ்த்துக்குத் தான் முதன்மையும் முன்னுரிமையும் அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் நமது அரசின் உறுதியான கொள்கையாகும். மேற்கு வங்கம் உள்ளிட்ட பிற மாநிலங்களில்கூட அந்தந்தப் பிராந்தியப் பாடலுக்குத் தான் முதலிடம் வழங்கப்பட்டு வருகிறது. அதே நடைமுறைதான் தமிழகத்திலும் பின்பற்றப்பட வேண்டும்; மாறாகச் செய்வது தவறான செயலாகும். இதனை அரசு ஒருபோதும் அனுமதிக்காது, தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளாத எவற்றையும் இந்த அரசு சகித்துக்கொள்ளாது" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து மேகதாது விவகாரம் குறித்துப் பேசுகையில், "மேகதாது விவகாரத்தில் அனைத்துத் தரப்பினருடனும் விரிவாகக் கலந்தாலோசித்து உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இச்சமூக மற்றும் மாநில நலன் சார்ந்த விவகாரத்தில் பல்வேறு தரப்பினரிடமும் முதல்வர் விஜய் அவர்கள் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி வருகிறார். மேகதாது விவகாரத்தில் அடுத்தகட்டமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரைவில் இறுதி முடிவு எட்டப்பட்டு அறிவிக்கப்படும்" என்று விளக்கமளித்தார்.
