தமிழ்நாடு திவால் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது” - பியூஷ் கோயல்

தமிழ்நாடு அரசின் கடன் திமுக ஆட்சியில் இரு மடங்காக அதிகரித்துள்ளது என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

Hero Image

மத்திய ரயில்வே அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பியூஷ் கோயல், தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை சென்னையில் வெளியிட்டார். இந்த அறிக்கையில் தமிழ்நாட்டின் கடன் சுமை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், மாநிலம் திவால் நிலைக்கு சென்று கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பியூஷ் கோயல் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தபோது, “தமிழ்நாடு அரசின் கடன் திமுக ஆட்சியில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. தமிழ்நாடு அரசு வாங்கிய பெரும் தொகையால் அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் எவை என்பது குறித்து தெளிவான பதில் இல்லை” என்று கூறினார்.

மேலும், “5 ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடன் இரு மடங்காக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் ரூ.76,000 கோடி தொகை வட்டி செலுத்துவதற்கு மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது. அரசின் வருவாய் எல்லாம் கடனை அடைக்கவே செல்கிறது” என்று அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் தற்போதைய நிதிநிலையை கடுமையாக விமர்சித்த பியூஷ் கோயல், “தமிழ்நாடு திவால் ஆகும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது” என்று கூறினார்.எதிர்கால ஆட்சி குறித்தும் பேசிய அவர், “பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி சிறப்பாக நடைபெறும். பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் நடக்கும் எடப்பாடி பழனிசாமி அரசை தேர்ந்தெடுக்க மக்கள் தயாராக உள்ளனர்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து பாஜக தரப்பில் வெளியிடப்பட்ட இந்த வெள்ளை அறிக்கை, திமுக அரசின் நிதி மேலாண்மையை கடுமையாக விமர்சித்துள்ளது. வருவாய் முழுவதும் கடன் வட்டியை அடைக்கவே செலவழிக்கப்படுவதாகவும், அரசின் அடிப்படை பொறுப்புகளை நிறைவேற்ற முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்த வெள்ளை அறிக்கை வெளியீடு தமிழ்நாட்டு அரசியலில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.