மாணவி பாலியல் விவகாரம் – சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது என்ன?

அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பற்றி விரிவாக பார்க்கலாம்.

MK Stalin - TN Assembly

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல் தாக்குதல் விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் அதிமுக, விசிக, சிபிஎம் உள்ளிட்ட கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. சிறப்பு கவன ஈர்ப்பு என்ற முறையில் சட்டப்பேரவையில், எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், காரசாரமான விவாதம் நடைபெற்றது.

இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை ஆற்றினார்.  அவரது  உரையில், “மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இங்கே கொண்டு வரப்பட்டிருக்கக்கூடிய கவள ஈர்ப்புத் தீர்மானத்தில் பல்கலைக்கழகத்தினுடைய பெயரைச் சொல்லி நீங்களெல்லாம் பேசியிருக்கிறீர்கள், ஆனால், நான் அந்தப் பல்கலைக்கழகத்தின் பெயரைச் சொல்லி, அந்தப் பெயருக்கு ஒரு களங்கத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. ஏனென்றால், எங்களைபயல்லாம் ஆளாக்கியவர் அவர். அந்த உணர்வோடு, அந்தப் பெயரைத் தவிர்த்து, இங்கே பதிலளிக்க விரும்புகிறேன்.

சென்னையில் ஒரு மாணவி மீது நடத்தப்பட்டிருக்கக்கூடிய பாலியல் வன்கொடுமை என்பது மாபெரும் கொடூரம். அதை யாராலும் நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. இதுகுறித்து, இந்த அவையிலே இதுகுறித்து உண்மையான அக்கறையோடு பல உறுப்பினர்கள் பேசியிருக்கிறீர்கள். இதைப் பயன்படுத்தி இந்த ஆட்சியின் மீது தவறான எண்ணத்தை உருவாக்குவதற்காகவும் சில உறுப்பினர்கள் பேசியிருக்கின்றார்கள்.

சிலர் அல்ல… ஒரு உறுப்பினர் பேசியிருக்கிறார். யாருக்கு எந்த நோக்கம் இருந்தாலும், பாதிக்கப்பட்ட பெண் பக்கம் நின்று, அவருக்கு சட்டப்படி நியாயம் பெற்றுத் தரக்கூடிய காரியத்தைத் தவிர, தமிழ்நாடு அரசுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை என்பதைத் தெளிவாக, உறுதியாக, ஆணித்தரமாக முதலிலேயே நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

குற்றம் நடந்த பிறகு, ஒருவேளை குற்றவாளியை உடனடியாகக் கைது செய்யாமல் விட்டிருந்தாலோ அல்லது குற்றவாளியை காப்பாற்ற முடிவு செய்திருந்தாலோ அரசை நீங்கள் குறை சொல்லலாம். ஆனால், சில மணிநேரத்துக்குள் குற்றவாளியை கைது செய்தபிறகும், குற்றம் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை எல்லாம் திரட்டியபிறகும் அரசைக் குறை சொல்வது, அரசியல் ஆதாயத்திற்குத்தானே தவிர, உண்மையான அக்கறையோடு செய்யப்படுவது இல்லை என்று இந்த மாமன்றத்திலே நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 24.12.2024 அன்று பிற்பகல் சென்னை மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. உடனடியாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மறுநாள் காலையிலேயே இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி ஞானசேகரள் காவல் துறையால் கைது செய்யப்பட்டார். இது காவல் துறை எடுத்த துரிதமான, சரியான நடவடிக்கை.

இருந்தாலும், எதிர்க்கட்சி என்ன குற்றச்கூட்டு சொல்கிறார்கள்? முதல் தகவல் அறிக்கை கசிந்தது தொடர்பாகப் பேசுகிறார்கள். அடுத்து, பாதுகாப்பு இல்லை, கேமரா இல்லை என்று பொத்தாம்பொதுவாச் சொல்கிற குற்றச்சாட்டில் உண்மையில்லை. சம்பவம் நடந்த வளாகத்தைச் சுற்றியிருக்கிற பகுதிகளிலிருந்த கண்காணிப்புக் கேமிராக்கள் உதவியோடதான் குற்றவாளி அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்.

மூன்றாவது குற்றச்சாட்டு, முதல் தகவல் அறிக்கை வெளியானதை வைத்துக்கொண்டு, “யார் அந்த சார்?” என்று கேட்கிறார்கள், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுதான் இப்பொழுது இந்தப் புகாரை விசாரிக்கிறார்கள். கைது செய்பப்பட்ட குற்றவாளி குண்டர் ஈட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்

இந்தப் புலன் விசாரணையில் வேறு யாரேனும் குற்றவாளிகள் இருக்கிறார்களா என்பது தெரிய வந்தால், அது யாராக இருந்தாலும் சரி, மீண்டும் மீண்டும் சொல்கிறேன். ‘அது யாராக இருந்தாலும் சரி’. அவர்கள் மீது தயவு தாட்சண்யமே இல்லாமல் காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும். இதை இந்த அவைக்கு 100 சதவீதம் உறுதியோடு நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

நான் எதிர்க்கட்சிகளைக் கேட்க விரும்புவது “யார் அந்த சார்?” என்று சொல்லி குற்றம்சாட்டுகிறீர்கள். உண்மையாவே உங்களிடம் அதற்கான ஆதாரம் இருந்தால், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்டிருக்கின்ற சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் சென்று அதைக் கொடுங்கள். அதைச் சொல்லுங்கள், அதை யார் தடுக்கப் போகிறார்கள்? அதைவிட்டுவிட்டு, ஒரு மாணவி சம்பந்தப்பட்ட சென்சிட்டிவான வழக்கில் வீண் விளம்பரத்துக்காக, குறுகிய அரசியல் இலாபத்துக்காக மலிவான செயலில் மீண்டும் மீண்டும் ஈடுபட வேண்டாம் என்று உங்களிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான முதல் 10 மாநகரங்களில், நம்முடைய கோவையும், சென்னையும் இருக்கிறது. பெண்கள் அதிகம் பேர் வேலைக்குச் செல்லும் மாநிலமாக தமிழ்நாடு முன்னணியில இருக்கிறது. பத்து இலட்சத்துக்கும் உட்பட்டிருக்கக்கூடிய மக்கள்தொகை உள்ள சிறிய நகரங்களில் திருச்சி, வேலூர், ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகிய ஐந்து நகரங்களும் முதல் தர வரிசையில் பாதுகாப்பான நகரங்களாக இருக்கிறது.

சென்னை மாணவி விவகாரத்தில் மட்டுமல்ல, எந்தப் பாலியல் வன்கொடுமை புகாரிலும் இந்த அரசு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதும் இல்லை. விலகி நிற்பதும் இல்லை. மனசாட்சி இல்லாமல், பெண்களின் பாதுகாவலர்கள் மாதிரி பேசுபவர்கள் கடந்த அ.தி.மு.க ஆட்சில பொள்ளாச்சியில் என்ன நடந்தது என்று கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

அதேபோன்று, இந்த வழக்கு பற்றி பா.ஜ.க.-வினர் பொதுவெளியில் பேசியிருக்கிறார்கள், தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.சு. கதைகளை எல்லாம் சொல்லி, இந்த அவையின் மாண்பைக் குறைக்க நான் விரும்பவில்லை. அரசு மீது குற்றச்சாட்டுகளை வைக்கும்போது, பொறுப்பினை உணர்ந்து பேச வேண்டும்.

உயர்நீதிமன்றம் அமைத்திருக்கிற சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை முழு வீச்சில் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. வேறு யாரேனும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிய வந்தால், அது யாராக இருந்தாலும், எந்தப் பின்னணியைச் சேர்ந்தவராக இருந்தாலும், கடும் நடவடிக்கையை நிச்சயமாக, உறுதியாக நாங்கள் எடுப்போம் என்பதை மீண்டும் ஒருமுறை இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘திராவிட மாடல் ஆட்சி, மகளிருக்கான ஆட்சி’ கட்டணமில்லா விடியல் பேருந்து பயணத்தைத் தொடங்கி, கோடிக்கணக்கான மகளிருக்கு உரிமைத் தொகையை உறுதி செய்து, கல்லூரிக்கு வரும் அரசுப் பள்ளி மாணவியரை புதுமைப் பெண்களாக வளர்த்தெடுத்து வருகின்ற ஆட்சி” இவ்வாறு பேசியிருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்