சென்னை :தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் இன்று உப்பளம் எக்ஸ்போ கிரவுண்ட்டில் நடைபெற்ற முதல் பொதுக்கூட்டத்தில், புதுச்சேரியின் நீண்டகால கோரிக்கையான மாநில அந்தஸ்து குறித்து கடுமையாகப் பேசினார். “புதுச்சேரி மக்களும் என்னை 30 வருஷமாக தாங்கிப் பிடிச்சிருக்கீங்க. இந்த விஜய் தமிழ்நாட்டுக்கு மட்டும் குரல் கொடுப்பான்னு நினைக்காதீங்க; புதுச்சேரி மக்களுக்கும் சேர்த்துத்தான் குரல் கொடுப்பான்” என்று உறுதியளித்தார். 16 முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் மத்திய அரசு மாநில அந்தஸ்து தரவில்லை என்று விமர்சித்தார்.
விஜய் மேலும், “ஒரு அமைச்சர் பதவி ஏற்று 200 நாட்களாகியும் இலாகா ஒதுக்கப்படவில்லை. டூரிஸ்ட் இடமான புதுச்சேரியில் பார்க்கிங், கழிப்பறை வசதி இல்லை, ரேஷன் கடைகளும் இல்லை. இவற்றை கொண்டு வர வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். “புதுவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி பட்டொளி வீசி பறக்கும்” என்று உற்சாகப்படுத்தினார். இது புதுச்சேரி மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், விஜய்யின் இந்தப் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்தார். “மாஹே, ஏனாம் வேணாம்.. மாநில உரிமை வேணும் என்று நான்தான் முதன்முதலில் புதுச்சேரிக்காக குரல் கொடுத்தேன். அதுக்கு அப்புறம்தான் ரங்கசாமியே போய் மனு கொடுத்தார். நான் முன்வைத்த அந்தக் கோரிக்கை வலுப்பெறுகிற மாதிரி தம்பி விஜய்யும் பேசியிருக்கிறது மகிழ்ச்சி” என்று கூறினார். புதுச்சேரி மாநில அந்தஸ்து கோரிக்கையில் விஜய் தன்னுடன் இணைந்ததை சீமான் பாராட்டினார்.
விஜய்யின் புதுச்சேரி பொதுக்கூட்டம் குறித்த கேள்விக்கு சீமான் கடுமையாக பதிலளித்தார்: “நான் 2 நாட்களுக்கு முன் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து உளுந்தூர்பேட்டையில் பொதுக்கூட்டம் நடத்தினேன். அதைப் பற்றி எத்தனை கட்சி தலைவர்களிடம் கருத்து கேட்டீர்கள்? இவருக்கு ஒரு சீட்டு எடுங்கனு கிளி ஜோசியக்காரன் மாதிரி என்னிடம் கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்” என்று ஊடகங்களை சாடினார். விஜய்யின் பிரச்சாரத்தை மட்டும் அதிகம் விளம்பரப்படுத்துவதாகவும் அவர் விமர்சித்தார்.
