திருவள்ளூர் :காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசிகாந்த் செந்தில், தமிழ்நாட்டிற்கு சமக்ர சிக்ஷா அபியான் (SSA) நிதி விடுவிக்கப்படாததை எதிர்த்து நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தின் மூன்றாம் நாளான இன்று உயர் இரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து 3வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில், தற்போது சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.
அவர் தனது எக்ஸ் பதிவில், “எனது உண்ணாவிரதத்தின் மூன்றாவது நாளில், உயர் இரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி, திருவள்ளூர் அரசு மருத்துவமனையிலிருந்து சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டேன். இங்கிருந்தும், நமது உரிமையான SSA நிதி விடுவிக்கப்படும் வரை அதே உறுதியுடன் உண்ணாவிரதத்தைத் தொடர்கிறேன்,” என்று கூறியுள்ளார்.
இந்த உண்ணாவிரதம், மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு ரூ.2,152 கோடி SSA நிதியை நிறுத்தி வைத்திருப்பதாகக் கூறி, 43 லட்சம் மாணவர்கள் மற்றும் 2.2 லட்சம் ஆசிரியர்களின் எதிர்காலம் நிச்சயமற்றதாக உள்ளது என்பதை எதிர்த்து தொடங்கப்பட்டது.
