கூட்டணிக்குள் சலசலப்பு! வைகோவின் நடைபயணத்தை புறக்கணித்த காங்கிரஸ்!

வைகோவின் நடைபயணத்தை முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்

Vaiko selvaperunthagai

சென்னை :மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணம் இன்று திருச்சியில் இருந்து தொடங்குகிறது. தென்னூர் உழவர் சந்தை அருகே நடைபெறும் தொடக்க விழாவில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் நடைபயணத்தைத் தொடங்கி வைக்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக துணைப் பொதுச்செயலாளர் துரை வைகோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

நடைபயணம் திருச்சியில் இருந்து மதுரை வரை நடைபெற உள்ளது. நாளொன்றுக்கு 15 முதல் 17 கி.மீ. வரை சுமார் 600 பேருடன் நடக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக வைகோ தெரிவித்தார். சமூக நீதி, சமத்துவம், மதச்சார்பற்ற தன்மை ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் இந்த நடைபயணம் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மதிமுக தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.

தொடக்க விழாவில் அமைச்சர்கள் பலரும் கலந்துகொள்கின்றனர். திமுக கூட்டணியின் ஒருங்கிணைப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. வைகோவின் நடைபயணம் தமிழக அரசியலில் புதிய அலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கிடையே, நடைபயணத்தின் அழைப்பிதழில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் படம் இடம்பெற்றிருந்ததால் காங்கிரஸ் கட்சி இந்த நிகழ்ச்சியைப் புறக்கணித்துள்ளது.

காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்கவில்லை. இது திமுக கூட்டணியில் சிறு அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது.வைகோவின் சமத்துவ நடைபயணம் மதுரையில் நிறைவு பெற உள்ளது. இந்தப் பயணம் சமூக நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தும் என்று மதிமுக தரப்பு தெரிவித்துள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியாகவும் இது பார்க்கப்படுகிறது.