மதுரை தவெக மாநாட்டிற்கு காவல் துறை அனுமதி – தவெக பொதுச்செயலாளர் ஆனந்த்.!

காவல் துறை எழுப்பிய 42 கேள்விகளுக்கு பதில் அளித்த நிலையில் தற்போது அனுமதி கிடைத்தது என்று தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தகவல் தெரிவித்துள்ளார்.

TVK Maanadu

மதுரை :மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாட்டிற்கு காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்த மாநாடு ஆகஸ்ட் 21ம் தேதி மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி பகுதியில் நடைபெறவுள்ளது.

ஆரம்பத்தில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த இந்த மாநாடு, விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக காவல் துறையின் வேண்டுகோளை ஏற்று ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.

தவெக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் காவல் துறையிடம் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டு, காவல் துறை எழுப்பிய 42 கேள்விகளுக்கு (பாதுகாப்பு, போக்குவரத்து, வாகன நிறுத்துமிடம், கண்காணிப்பு கேமராக்கள், உணவு மற்றும் குடிநீர் வசதிகள் போன்றவை) தவெக தரப்பில் பதில்கள் அளிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, மதுரை காவல் துறை மாநாட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளதாக புஸ்சி ஆனந்த் தெரிவித்தார். தமிழக வெற்றி கழக மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது, பார்க்கிங் வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட முக்கிய கேள்விகளுக்கும் விளக்கம் அளித்துள்ளோம். மாநாட்டு பணிகள் 70% நிறைவு பெற்றுள்ளதாக கூறினார்.

மேலும், மாநாட்டில் தவெக தலைவர் விஜய் மட்டுமே பேசுவார் என்றும், வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும் தவெக தரப்பில் காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்காக 530 ஏக்கர் நிலம் வாடகைக்கு எடுக்கப்பட்டு, 300 ஏக்கர் மாநாட்டிற்கும், மீதமுள்ளவை வாகன நிறுத்தத்திற்கும் பயன்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.