டெல்லி :மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையம் மற்றும் ஆளும் பாஜக அரசு மீது தொடர்ந்து முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். 2024 மக்களவை தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா, கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்களில் வாக்கு திருட்டு மற்றும் வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்ததாக அவர் நேற்றைய தினம் குற்றம்சாட்டியுள்ளார்.
குறிப்பாக, மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் மற்றும் செல்லாத முகவரிகள் கண்டறியப்பட்டதாக அவர் ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளார். ராகுல் காந்தி, தேர்தல் ஆணையம் மின்னணு வாக்காளர் பட்டியலை வழங்க மறுப்பதாகவும், இது முறைகேடுகளை மறைப்பதற்காக வேண்டுமென்றே செய்யப்படுவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், “காங்கிரஸ் ஆளுங்கட்சியாக வரும்போது, தற்போது முறைகேடு செய்பவர்கள் தப்ப முடியாது” என்று எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “ஒரு நாள் எதிர்க்கட்சி, ஆளுங்கட்சியாக மாறும், அப்போது நீங்கள் தப்ப முடியாது. இந்தியாவின் தேசத் தந்தைகள் கட்டமைத்த அஸ்திவாரத்தை அசைத்துப் பார்த்துள்ளீர்கள், இனி உங்களை தொட விடமாட்டோம். தேர்தல் ஆணையம் முழு விவரங்களையும் எங்களுக்கு வழங்க வேண்டும்.
இல்லாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். இதை செய்த ஒவ்வொரு தேர்தல் அதிகாரியும் பிடிபடுவார். உயர் பதவியில் இருந்தாலும் சரி கடைநிலையில் பணியாற்றினாலும் சரி. இதை செய்த ஒவ்வொரு தேர்தல் அதிகாரியும் பிடிபடுவார்கள்” என்று எச்சரித்துள்ளார். ராகுலின் இந்த எச்சரிக்கை, கர்நாடகாவில் வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து பெங்களூருவில் நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு முன்னோட்டமாக அமைந்துள்ளது.
அதன்படி, 2024 மக்களவைத் தேர்தலின் போது நடந்ததாக கூறப்படும் ‘வாக்கு திருட்டை’ கண்டித்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், நமது வாக்கு, நமது உரிமை, நமது போராட்டம்’ என்ற கோரிக்கையுடன், வாக்காளர் அதிகார பேரணி’ இன்று பெங்களூரு ஃப்ரீடம் பார்க்கில் நடைபெறுகிறது. மேலும், காங்கிரஸார் பேரணியாக சென்று தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை மனுவை சமர்ப்பிக்கவுள்ளனர்.
