சென்னை :தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவேன் என்று மீண்டும் உறுதியாக தெரிவித்துள்ளார். இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். “அதிமுக தலைவர்கள் யாரும் விஜயிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. யாருமே அவரை சேர்க்க முயலவில்லை என்றால், அவர் தனித்துத்தான் நிற்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ராஜேந்திர பாலாஜி தொடர்ந்து, அதிமுகவின் வலிமையை வலியுறுத்தினார். “அதிமுகவின் ஓட்டு வங்கி எந்தக் காலத்திலும் விலகாது, உடையாது, குலையாது. ரெட்டை இலை சின்னத்துக்கு ஓட்டுப் போட தயாராக இருக்கும் மக்கள் தமிழகத்தில் அதிகம் உள்ளனர்” என்று அவர் கூறினார்.
திமுக ஆட்சி மீது மக்களுக்கு உள்ள வெறுப்பு அத்தனையும் அதிமுக மீது வாசனை பொழியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.“எடப்பாடி பழனிசாமி தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். எனவே எடப்பாடி வெல்வார், ரெட்டை இலை வெல்லும், அதிமுக வெல்லும். ஆட்சியை எடப்பாடி அமைப்பார்” என்று ராஜேந்திர பாலாஜி உறுதியுடன் தெரிவித்தார்.
இது அதிமுக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.விஜய்யின் தனித்து போட்டியிடும் முடிவு குறித்து பாலாஜி கிண்டலாக பேசினார். “தனித்துதான் போட்டியிடுவேன் என்று விஜய் வந்து மீண்டும் சொல்லியிருக்கார். நிக்கட்டும். அண்ணாதிமுக தலைவர்கள் யாரும் வந்து அவரிடம் பேசி நடத்தலையே. அவர்கிட்ட போய் யாரும் பேச்சு நடத்தல. பேசித் தனித்துத் தனித்த ஒருத்தருமே போகலைன்னா தனித்தா நிக்கணும்” என்று அவர் கூறினார்.
அதிமுக – பாஜக கூட்டணி அறிவிப்பு குறித்து பாலாஜி, “ஒண்ணுமே கிடையாது. நல்ல நேரம் பாத்து கால நேரம் பாத்துதான் அறிவிக்க முடியும். அதுல ஒண்ணுமே கிடையாது. கால நேரம் பாத்து அறிவிப்பாரு. எப்பயுமே அண்ணாதிமுக வந்து எப்பயுமே வந்து பொறுமையாகத்தான் அம்மா இருக்கிற காலத்திலும் கையாண்டு வந்தார். அதேதான் எங்கள் பொதுச் செயலாளர் எங்கள் தலைவர் எடப்பாடி கையாண்டு வருகிறார்கள்” என்று தெரிவித்தார்.
