திமுகவோ, அதிமுகவோ அதிகாரப்பூர்வமாக யாரும் என்னை அணுகவில்லை - திருமாவளவன்!

திமுகவோ, அதிமுகவோ அதிகாரப்பூர்வமாக யாரும் என்னை அணுகவில்லை, நானும் யாரிடமும் பேசவில்லை என திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

Hero Image

சென்னை : சென்னை: தவெக ஆட்சி அமைக்கும் சூழலில், தன்னை முதலமைச்சராக்கும் முயற்சி நடைபெற்றதாகவும், அதை காங்கிரஸ் முறியடித்ததாகவும் பரவிய செய்திகள் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், “நேற்றும் இன்றும் ஊடகங்களில் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. ஒரு செய்தியாளர் என்னிடம், ‘தங்களை முதல்வராக்க நடந்த முயற்சியை காங்கிரஸ் முறியடித்துவிட்டதாகச் சொல்கிறார்களே’ என்று கேட்டார். அதற்கு நான், ‘அப்படியொரு முயற்சி நடந்ததாக எனக்கும் தகவல் கிடைத்தது’ என்று பதிலளித்தேன்” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “எனக்கு நெருங்கிய நண்பர்கள் சிலர் என்னை அணுகி அதைப் பற்றி பேசினார்கள். அதிமுக, திமுக மற்றும் அந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகள் அந்த முயற்சியை மேற்கொண்டதாக எனக்கும் தகவல் கிட்டியது. ஆனால், திமுகவோ அதிமுகவோ அதிகாரப்பூர்வமாக யாரும் என்னை அப்படி அணுகவில்லை. நானும் யாரிடமும் பேசவில்லை” என்று தெளிவுபடுத்தினார்.

திருமாவளவன், “எனது பதிலை வேறு பொருள்படும்படி தலைப்பிட்டு செய்திகளைப் பரப்பி பரபரப்பை ஏற்படுத்துவது ஊடக அறமில்லை. உள்நோக்கத்தோடு செய்திகளைத் திரித்து வெளியிடுவது வேதனையளிக்கிறது” என்று ஊடகங்களுக்கு கண்டனம் தெரிவித்தார்.தலித் முதலமைச்சர் கனவு குறித்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் தலித் சமூகத்தைச் சார்ந்த ஒருவர் முதல்வர் ஆகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை என்பது அனைவரும் அறிந்த கசப்பான உண்மையாகும்.

உத்தரபிரதேசம், ஆந்திரா, மகாராஷ்ட்ரா, பீகார், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் தலித்துகள் முதலமைச்சர்களாக இருந்த வரலாறு இருந்தாலும், தமிழ்நாட்டில் இன்னும் ஒரு நூறாண்டானாலும் அது கனவாகவே இருக்கும்” என்றார். இந்த விளக்கத்தின் மூலம், தற்போது பரவி வரும் செய்திகளுக்கு திருமாவளவன் தனது தரப்பை தெளிவுபடுத்தியுள்ளார்.