NDA கூட்டணி மேடையில் மாம்பழம் சின்னம் – கொந்தளித்த ராமதாஸ்!

அனுமதி பெறாமல் மாம்பழம் சின்னத்தை NDA கூட்டணி மேடையில் பயன்படுத்துவதா என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

S. Ramadoss

சென்னை :தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மதுராந்தகத்தில் இன்று (ஜனவரி 22) பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) பொதுக்கூட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜிகே வாசன் உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்ட மேடையின் பின்னணியில் வைக்கப்பட்ட பேனர்களில் பாமகவின் அடையாளச் சின்னமான ‘மாம்பழம்’ இடம்பெற்றிருந்தது. இது பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸை கோபமடையச் செய்துள்ளது. தற்போது பாமகவில் ராமதாஸ் – அன்புமணி இடையே கடும் உட்கட்சி மோதல் நிலவி வரும் சூழலில், சின்னம் தொடர்பான வழக்குகள் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், மருத்துவர் ராமதாஸ் கடுமையான கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: “தன்னிடம் எவ்வித அனுமதியும் பெறாமல், மேடை பேனர்களில் மாம்பழச் சின்னத்தைப் பயன்படுத்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது தமிழக மக்களை ஏமாற்றும் செயல். தேர்தல் ஆணையத்தின் வசம் நிலுவையில் உள்ள ஒரு சின்னத்தைப் பொதுக்கூட்டத்தில் பயன்படுத்துவது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது மற்றும் சட்டவிரோதமானது.”ராமதாஸ் மேலும் கூறியுள்ளார்.

“நாட்டின் பிரதமர் பங்கேற்கும் ஒரு முக்கிய நிகழ்ச்சியில் இத்தகைய அதிகார துஷ்பிரயோகம் நடப்பது பிரதமர் பதவிக்கே இழைக்கப்படும் இழுக்கு. அரசியல் அறமற்ற இந்தச் செயலைத் தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.” தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த சர்ச்சை பாமகவின் உள் மோதலை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. ராமதாஸ் தனது மகள் காந்திமதியை செயல் தலைவராக நியமித்துள்ள நிலையில், அன்புமணி ராமதாஸ் தன்னைத் தலைவராக அறிவித்துக் கொண்டுள்ளார். சமீபத்தில் அன்புமணி எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அதிமுக கூட்டணியில் இணைந்ததாக அறிவித்திருந்தார்.

ஆனால் இன்றைய கூட்டத்தில் மாம்பழச் சின்னம் பயன்படுத்தப்பட்டது ராமதாஸ் தரப்பை ஆத்திரமடையச் செய்துள்ளது.இந்த சம்பவம் தமிழக அரசியலில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் சின்னம் தொடர்பான இந்தப் போர், வரும் நாட்களில் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் எடுக்கும் நடவடிக்கை தமிழக அரசியல் களத்தில் முக்கியமானதாக இருக்கும்.