சென்னை :திருச்சியில் மார்ச் 9-ஆம் தேதி ‘ஸ்டாலின் தொடரட்டும் – தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற தலைப்பில் திமுக நிர்வாகிகளின் தேர்தல் சந்திப்பு சிறப்பு மாநாடு நடைபெற உள்ளது. சிறுகனூரில் நடைபெறும் இந்த மாநாட்டிற்கு திமுக முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கழகத்தின் மாவட்டம், ஒன்றியம், நகரம், பேரூர், கிளை நிர்வாகிகள், அனைத்து அணி நிர்வாகிகள், தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் அனைவரும் இம்மாநாட்டில் கலந்து கொள்ள உற்சாகமுடன் தயாராகி வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இம்மாநாட்டிற்கு கழக உடன்பிறப்புகளுக்கு சிறப்பு அழைப்பு விடுத்து கடிதம் எழுதியுள்ளார். “எல்லாச் சாலைகளும் திருச்சியை நோக்கியே செல்கின்றன” என்று குறிப்பிட்ட அவர், கழகத்தின் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு “உங்களில் ஒருவன்” என்று தன்னை அறிமுகப்படுத்தி எழுதியுள்ளார்.
இந்த மடல் கழக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருச்சி மாநாடுகளை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது.முதலமைச்சர் தனது கடிதத்தில், 1956-இல் திருச்சியில் நடந்த இரண்டாவது மாநில மாநாட்டில் பேரறிஞர் அண்ணா எழுதிய “அன்பில் அழைக்கிறார்” என்ற கடிதத்தை நினைவுகூர்ந்தார். 1957-இல் கழகம் முதன்முதலில் தேர்தல் களம் கண்டது திருச்சி மாநாட்டின் முடிவின்படி தான் என்பதையும், குளித்தலை தொகுதியில் கலைஞர் வெற்றி பெற்றது திருச்சி மண்ணின் பெருமையாகும் என்பதையும் சுட்டிக்காட்டினார். 1970-இல் திருச்சி மாநாட்டில் கலைஞர் வழங்கிய ஐம்பெரும் முழக்கங்கள் இன்றும் கழகத்தின் உயிர்மூச்சாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், 2021-இல் சிறுகனூரில் நடந்த மாநாட்டில் தான் குடும்பத் தலைவியருக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை என்ற அறிவிப்பை வெளியிட்டதாக ஸ்டாலின் நினைவுகூர்ந்தார். அந்தத் திட்டம் இன்று 1 கோடியே 31 இலட்சம் மகளிருக்கு வழங்கப்பட்டு வருவதாகவும், சிறப்புத் தொகுப்புகளுடன் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
திருச்சி மண்ணில் இந்தி எதிர்ப்பு மாநாடுகள் நடைபெற்ற வரலாற்றையும், சமீபத்தில் ரயில்வே கோட்டத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து கழகத்தினர் எழுப்பிய போராட்டத்தையும் அவர் நினைவூட்டினார்.இறுதியாக, 2026 தேர்தலில் திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற உறுதியுடன், ‘தமிழ்நாடு 2030’ என்ற 14 முக்கிய அம்சங்களை மார்ச் 6-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற ‘கனவு மெய்ப்படும்’ நிகழ்வில் வெளியிட்டதாக ஸ்டாலின் குறிப்பிட்டார். மார்ச் 9-ஆம் தேதி சிறுகனூரில் நடைபெறும் இந்த மாநாடு வரலாறு படைக்கும் என்றும், கருப்பு-சிவப்பு கொடிகள் அலையடிக்கும் பெருங்கடலாக திருச்சி மாறும் என்றும் அவர் உற்சாகமாக அழைப்பு விடுத்துள்ளார்.
