சென்னை :கரூர் பொதுக்கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை தற்போது தீவிரமடைந்து வருகிறது. கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகத் தலைவர் நடிகர் விஜய் பங்கேற்ற கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.இந்த வழக்கை முதலில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வந்தது. பின்னர் விஜய் தரப்பு உச்சநீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்தது.
உடனடியாக உச்சநீதிமன்றம் தனி நீதிபதி மேற்பார்வையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன்பிறகு சிபிஐ விசாரணை தொடங்கியது.சிபிஐ விசாரணை தொடங்கியதிலிருந்து பல்வேறு ஆதாரங்களை திரட்டி வருகிறது. ஜனவரி 12 மற்றும் 19-ஆம் தேதிகளில் நடிகர் விஜய் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்தார்.
இந்நிலையில் மீண்டும் மார்ச் 10-ஆம் தேதி ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியது. ஆனால் தேர்தல் பணிகள் அதிகமாக இருப்பதால் 15 நாட்கள் அவகாசம் கோரப்பட்டது. சிபிஐ அதை ஏற்று அவகாசம் வழங்கியுள்ளது.விஜய் தரப்பில் விசாரணை சென்னைக்கு மாற்ற முடியுமா என்று கேட்டபோது, சிபிஐ டெல்லியில்தான் விசாரணை நடைபெறும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தற்போது முன்னாள் அமைச்சரும் திமுக எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜியை விசாரிக்க சிபிஐ மனு அளித்துள்ளது. ஆனால் செந்தில் பாலாஜி தரப்பு அம்மனுவை பெறவில்லை என்றும், விசாரணைக்கு ஆஜராக மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து, செந்தில் பாலாஜி தனது சமூக வலைத்தள பதிவில், “வருகின்ற மார்ச் 17 அன்று நேரில் வந்து விளக்கமளிக்குமாறு சிபிஐ அனுப்பிய சம்மனின் அடிப்படையில், அவர்களது கேள்விகளுக்கு நேரில் சென்று உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். இதனால் அவர் மார்ச் 17 அன்று சிபிஐ விசாரணைக்கு ஆஜராக உள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.
இந்த வழக்கு தமிழகத்தில் தற்போது நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்கு இடையூறாக அமையாமல் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. விஜய் மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பதால், வழக்கு விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணைகள் மார்ச் 17 அன்று தொடங்கும்.
