சென்னை :தமிழக அரசியலில் புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தவெக தலைவர் விஜய் குறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்தார். விஜய் அரசியல் அனுபவமற்றவர் என்றும், “முதலில் வீட்டிலிருந்து வெளியே வர வேண்டும், திரிஷா கிட்ட இருந்து வெளியே வரணும்” என்றும் கூறியது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
நடிகை திரிஷாவின் பெயரை தனிப்பட்ட வாழ்க்கையுடன் இணைத்து பேசியது அவதூறு மற்றும் அநாகரிகமானது என்று பலரும் கண்டனம் தெரிவித்தனர்.இந்த கருத்துக்கு தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். “நயினார் நாகேந்திரன் எல்லாம் ஒரு ஆளா?” என்று கேட்ட அவர், “பாஜக எல்லாம் ஒரு கட்சியா?” என்றும் கேள்வி எழுப்பினார்.
இது பாஜகவின் மாநிலத் தலைவர் மட்டுமின்றி, அக்கட்சியின் ஒட்டுமொத்த நிலைப்பாட்டையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் அமைந்துள்ளது.செங்கோட்டையனின் இந்த கேள்வி, நயினார் நாகேந்திரனின் பேச்சு தனிப்பட்ட அளவில் மட்டுமல்லாமல், பாஜகவின் அரசியல் நடத்தையையும் பிரதிபலிப்பதாகக் கருதப்படுகிறது.
தவெக தரப்பில் இதை அக்கட்சியின் மதிப்பீட்டின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது. விஜய்யை தனிப்பட்ட வாழ்க்கை சூழலுடன் இணைத்து விமர்சித்தது தவறான அணுகுமுறை என்று தவெக நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.இந்த சர்ச்சை தமிழக அரசியலில் பெண்களை மதிக்கும் நாகரிக அரசியல் குறித்த விவாதத்தையும் மீண்டும் எழுப்பியுள்ளது.
நயினாரின் கருத்துக்கு டிடிவி தினகரன், தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட பலரும் ஏற்கனவே கண்டனம் தெரிவித்த நிலையில், செங்கோட்டையனின் கேள்வி இப்போது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களிலும் இந்த கருத்து வேகமாக பரவி வருகிறது.இந்த சம்பவம், தேர்தல் காலத்தில் கட்சிகள் எப்படி விமர்சனங்களை முன்வைக்கின்றன என்பதை மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. அரசியல் விவாதங்கள் கொள்கை அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
