கேள்வி கேட்டால் கொலைதான் பதிலா? சிஎம் விஜய்யை அட்டாக் செய்த இபிஎஸ்!

தன் கட்சியினரை அடக்கி வைக்க வக்கில்லாதவர், எப்படி காவல்துறையை நிர்வகிப்பார் என எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Hero Image

சென்னை : தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட 23 வயது இளைஞர் விஷ்ணு அடித்துக் கொலை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "போதைப்பொருள் புழக்கத்தை எதிர்த்து கேள்வி கேட்டால் கொலைதான் பதிலா? இதுதான் இந்த அரசாங்கம் வாக்குறுதி அளித்த மாற்றமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய கருத்துகளையும் அவர் விமர்சித்துள்ளார். "தன் மீது வீண் பழி சுமத்தப்படுவதாக முதலமைச்சர் கூறுகிறார். ஆனால் அதிகாரிகளை நியமித்துவிட்டால் மட்டும் போதாது. எந்த ஆட்சி வந்தாலும் அதிகாரிகள் பணியாற்றுவார்கள். உண்மையான மாற்றம் ஆட்சியாளர்களிடம்தான் இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளுக்கு நேரடியாக பொறுப்பு ஏற்க வேண்டிய முதலமைச்சர் அதிலிருந்து நழுவ முயற்சிப்பதாகவும், காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் சட்டம்-ஒழுங்கு நிலைமைக்கு பதிலளிக்காமல் இருப்பது வெட்கக்கேடானது என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

பெண்கள் பாதுகாப்புக்காக அறிவிக்கப்பட்டுள்ள "சிங்கப்பெண் அதிரடிப்படை" திட்டம் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். "கடந்த வாரமே அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில், கடைசி நேரத்தில் அந்தத் திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது? அடுத்த வாரம் வரை பெண்கள் பாதுகாப்பின்றி இருக்க வேண்டுமா?" என்று அவர் கேட்டுள்ளார்.

மேலும், "ஆட்சி நடத்துவது எப்படி என்பதை கற்றுக்கொள்ளும் காலத்தில் மக்கள் உயிரிழந்து கொண்டே இருக்க வேண்டுமா? அதைக் கூட யாரும் கேள்வி கேட்கக் கூடாதா?" எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

தூத்துக்குடி அருகே நடைபெற்றதாக கூறப்படும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதாக வெளியாகும் தகவல்களையும் சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, கடந்த மூன்று வாரங்களில் எத்தனை ஆளுங்கட்சி நிர்வாகிகள் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர் என கேள்வி எழுப்பியுள்ளார்.

"ஒரு கட்சித் தலைவராக தன்னுடைய கட்சியினரையே கட்டுப்படுத்த முடியாதவர், எப்படி காவல்துறையை திறம்பட நிர்வகிப்பார்? இப்படிப்பட்ட ஆட்சி எப்படி மக்களை பாதுகாக்கும்? பெண்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்யும்?" என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இறுதியாக, "தான் வகிக்கும் பொறுப்பின் முக்கியத்துவத்தை உணராமல் இன்னும் திரைப்பட வசனங்கள் பேசும் மனநிலையிலேயே முதலமைச்சர் இருப்பதாக தெரிகிறது. அந்த மாய உலகில் இருந்து வெளியே வந்து, மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பை முழுமையாக ஏற்று உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

கேள்வி கேட்டால் கொலைதான் பதிலா? சிஎம் விஜய்யை அட்டாக் செய்த இபிஎஸ்!