வசதியான வாழ்க்கையை தூக்கி எறிந்துவிட்டு வந்திருக்கிறேன் - விஜய் !

இது ஒரு தலைமுறைக்கான தேர்தல், உங்களுக்கான தேர்தல் என விஜய் தெரிவித்துள்ளார்.

Hero Image

சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய், தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் வாக்கு சேகரிப்பை தொடங்கினார். வேட்புமனு தாக்கல் செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, பெரம்பூர் தொகுதியில் மக்களை நேரடியாகச் சந்தித்து பிரச்சாரத்தைத் தொடங்கிய அவர், “மிகப்பெரிய அடையாளம் பெரம்பூர்” என்று தொகுதியைப் பற்றி உணர்ச்சிப் பெருக்குடன் பேசினார்.

பெரம்பூர் தொகுதியில் வாக்கு சேகரிப்பைத் தொடங்கிய விஜய், “தமிழ்நாடு எனக்கு மிகவும் பிடித்த இடம். தாயின் ஆசியோடு தொடங்குவதுதான் முறை. எனவே உங்கள் விஜய் பெரம்பூர் தொகுதியில் இருந்து பிரச்சாரத்தைத் தொடங்குகிறேன். உழைப்பின் வாசம் இருக்கும் பெரம்பூரில் இருந்து பிரச்சாரத்தைத் தொடங்குகிறேன். வட சென்னையில் மிகப்பெரிய அடையாளம் பெரம்பூர்” என்று உருக்கமாகக் கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், “ஒரு நல்ல காரியத்தைத் தொடங்குவதற்கு முன்பு எங்கிருந்து தொடங்கலாம் என்று பல எண்ணங்கள் மனதில் வரும். நம்மைப் பிடித்தவர்கள் இருக்கும் இடத்திலிருந்து தொடங்கலாமா? அப்படி எல்லாம் நிறைய விஷயங்கள் தோன்றும். அதுபோல தமிழ்நாடு எனக்கு மிகவும் பிடித்த இடம். எனவே நம்முடைய வீட்டு வாசலிலிருந்து, நம்மைப் பெற்ற அம்மாவின் ஆசியோடு தொடங்குவது ஒரு நல்ல சகுனம். ஒளியோடு, வெளிச்சத்தோடு தொடங்குவது போல இருக்கும். அதனால்தான் உங்கள் விஜய் பெரம்பூர் தொகுதியிலிருந்து பிரச்சாரத்தைத் தொடங்க முடிவு செய்தேன்” என்றார்.

பெரம்பூரின் சிறப்புகளை எடுத்துரைத்த விஜய், “வட சென்னையில் மிகப்பெரிய அடையாளங்களில் ஒன்று பெரம்பூர். லூர்து அன்னை தேவாலயம், பிரசன்ன லட்சுமி நரசிம்மர் கோயில், பல புகழ் பெற்ற மசூதிகள் உள்ள இந்தத் தொகுதியில் இருந்து பிரச்சாரத்தைத் தொடங்குகிறேன். உழைக்கும் மக்கள், உழைப்பின் வாசம் நிறைந்த பகுதி இது. என் நெஞ்சில் குடியிருக்கும் பெரம்பூர் மக்களே!” என்று உணர்ச்சி பொங்கக் கூறினார்.

தொடர்ந்து பேசிய விஜய், தமிழ்நாட்டின் தற்போதைய நிலைமையைக் கடுமையாக விமர்சித்தார். “பெண்கள் பாதுகாப்பு இல்லாத, சட்டம் ஒழுங்கு சரியில்லாத, போதைப் பொருள் அதிகமாக உள்ள நமது தமிழ்நாட்டை நாம் காப்பாற்றியே ஆக வேண்டும். இந்த நிலைக்குக் காரணம் திமுக ஆட்சிதான். ஐந்து ஆண்டுகளில் என்ன நடத்தினார்கள்? ஆட்சி நடத்தினார்களா அல்லது வேறு ஏதோ நடத்தினார்களா? அடிப்படை வசதிகள் கூட இல்லை.

பெண்கள் இரவில் கழிப்பிடம் செல்லக்கூட பயப்படும் நிலை. பாட்டி வயதில் உள்ளவர்களுக்குக் கூட பாதுகாப்பு இல்லை. டீ கடையில் நிம்மதியாக டீ குடிக்க முடியாத நிலை. இது நாடா அல்லது காடா? இங்கு அரசு இருக்கிறதா இல்லையா? ஐந்து வருடம் போலீஸ் துறையை கையில் வைத்திருந்த ஸ்டாலின் அரசு அடிப்படை பாதுகாப்பைக்கூட கொடுக்க முடியவில்லை” என்று கேள்வி எழுப்பினார்.

வசதியான வாழ்க்கையை தூக்கி எறிந்துவிட்டு வந்திருக்கிறேன் - விஜய் !