கரூர்:தவெக தலைவர் விஜயின் கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் (செப்டம்பர் 27, 2025) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் மாநிலத்தை உலுக்கியுள்ளது. இதில் 10 குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர், 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.
இந்த துயரத்தை அடுத்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் கரூர் சென்று, கருப்பாயி கோயில் தெருவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
கரூர் அரசு மருத்துவமனையில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர், இதனையடுத்து, இந்த சம்பவத்திற்கு நிர்மலா சீதாராமன், “இந்த சம்பவம் மனதை உருக்குகிறது. யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் குறைகளை பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தெரிவித்து, முறையான விசாரணை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று உறுதியளித்தார்.
கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் பேசிய அவர், “பிரதமர் மோடி எங்களை ஆறுதல் கூற அனுப்பினார். அவர் நேரில் வர விரும்பினாலும், சூழல் காரணமாக வர முடியவில்லை. அழும் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளே இல்லை,” என்று உருக்கமாக கூறினார்.நிர்மலா மேலும், “மாநில அரசு அல்லது விசாரணை ஆணையத்தை கேள்வி கேட்க வரவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறவே வந்தோம்,” என்றார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” இனி இதுபோல் சம்பவம் நம் நாட்டில் நடைபெற கூடாது, இன்று இரவுக்குள் பாதிக்கப்பட்டவர்கள் கணக்கில் நிவாரண உதவி வரவு வைக்கப்படும் என்றும், யார் மீது தவறு என்பதை நிர்ணயிக்க எனக்கு அதிகாரம் இல்லை எனவும் இனிமேல் தமிழ்நாடு மட்டுமல்ல, நம்நாட்டில் இதுபோல் எங்கும் நடக்கக்கூடாது எனவும் பேசினார்.
மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து தவெக தரப்பு இந்த சம்பவத்தை ‘சதி’ எனக் கூறி மதுரை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கோரியது, ஆனால் நீதிமன்றம் மனுவை செப்டம்பர் 30-ல் தாக்கல் செய்ய அறிவுறுத்தியது. தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது 4 கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
