சென்னை :தமிழ்நாட்டில் கடந்த இரண்டு வாரங்களாக வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதால், பொதுமக்கள் முகக்கவசம் அணியுமாறு தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, குளிர்ந்த பகுதிகளிலும் மக்கள் நெருக்கமாக வசிக்கும் இடங்களிலும் இந்தப் பரவல் அதிகமாகக் காணப்படுகிறது. பொதுமக்கள் பீதி அடையாமல், அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்று சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.
மேலும், மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். காய்ச்சல், இருமல், தலைவலி, தொண்டை வலி, சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும்.
முதியவர்கள், கர்ப்பிணிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் பொது இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகளில் சளி, காய்ச்சல் உள்ளவர்களின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய வைரஸ் கண்டறியப்பட்டால், அதன் பரவலைத் தடுக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
