“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!

நடந்து முடிந்த குரூப் - 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்தி தேர்வர்களுக்கு நீதி வழங்க TNPSC முன்வர வேண்டும் என்று தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வலியுறுத்தியுள்ளார்.

Bussy Anand - TNPSC

சென்னை :தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப்-4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் கோரிக்கை வைத்துள்ளார். இந்தக் கோரிக்கைக்கு முக்கிய காரணம், தேர்வில் தமிழ் மொழி வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்விகள் மிகவும் கடினமாகவும், பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டதாகவும் இருந்ததால், தமிழ் வழியில் பயின்றவர்களின் வேலைவாய்ப்பு வாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இது குறித்து தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தனது எக்ஸ் தள பதிவில், ”தமிழ் மொழி மீது அதிக அக்கறை கொண்டிருப்பது போல் காட்டிக்கொண்டு, தமிழ் வழியில் பயின்ற ஏழை எளியவர்களுக்கான வேலைவாய்ப்பை மறைமுகமாகப் பறிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வரும் கபட நாடகத் திமுக அரசுக்குக் கண்டனம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தமிழ்நாடு அரசில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 3,395 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தொகுதி – 4 தேர்வினை, கடந்த 12ஆம் தேதி நடத்தியது. சுமார் 11 லட்சம் பேர் இத்தேர்வினை எழுதினர். இதில் வழங்கப்பட்ட வினாத்தாளில் தமிழ் மொழிப் பகுதிக்கான கேள்விகள் மிகக் கடினமாகக் கேட்கப்பட்டதாகத் தேர்வு எழுதியவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அதாவது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தொகுதி – 4 தேர்விற்குப் பத்தாம் வகுப்புத் தரத்திலான வினாக்கள் மட்டுமே கேட்கப்படும் என்று தெரிவித்திருந்தது. காலம் காலமாக இந்த நிலைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது கேட்கப்பட்டுள்ள தமிழ் வினாக்கள், அறிவிக்கையின் போது தெரிவிக்கப்பட்ட பத்தாம் வகுப்புத் தரத்திற்கு மேலான பட்டப் படிப்புத் தரத்திலும் ஆராய்ச்சித் தரத்திலும் கேட்கப்பட்டுள்ளன. இதனால் தமிழ் வழியில் பத்தாம் வகுப்புத் தரம் அளவில் தொகுதி – 4 தேர்விற்குத் தயாராகி இருந்த தேர்வர்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் வழியில் பயின்றவர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் வகையில் நடத்தப்பட்ட குரூப் – 4 தேர்வினை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்தி, தேர்வர்களுக்கு நீதி வழங்கத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

unknown node