புதுச்சேரியில் பெண்களுக்கு இலவச பேருந்து சேவை - ராகுல் காந்தி வாக்குறுதி!

புதுச்சேரியை பாஜக ஆட்டிப்படைக்கிறது என ராகுல் காந்தி விமர்சனம் செய்து பேசியிருக்கிறார்.

Hero Image

புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்காக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று புதுச்சேரிக்கு வருகை தந்தார். அவர் புதுச்சேரியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

பிரச்சாரத்தின் போது பேசிய ராகுல் காந்தி, “புதுச்சேரிக்கு வருவது எப்போதும் மகிழ்ச்சியான அனுபவத்தைக் கொடுக்கும். நான் அடிக்கடி இங்கு வருவதற்கு ஆசைப்படுகிறேன். அதற்கு உங்கள் அன்பும், நட்பும்தான் காரணம்” என்று புதுச்சேரி மக்களின் அன்பைப் பாராட்டினார்.

அதனைத்தொடர்ந்து, புதுச்சேரியின் ஆட்சி அமைப்பு குறித்து கடுமையாக விமர்சித்த அவர், “புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் புதுச்சேரியை ஆட்சி செய்யவில்லை. எங்கேயோ இருந்து இங்கு ஆட்சி செய்கின்றனர். புதுச்சேரியை பாஜக ஆட்டிப்படைக்கிறது. அவர்களின் சித்தாந்தம் இங்கு திணிக்கப்படுகிறது” என்று குற்றம் சாட்டினார்.

ராகுல் காந்தி புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் அளிக்கவுள்ள முக்கிய வாக்குறுதிகளை அறிவித்தார். “வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை வழங்கப்படும். அரசு மற்றும் தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். அரசு பணியில் சேர்வதற்கான வயது வரம்பு 40 ஆக உயர்த்தப்படும். பெண்களுக்கு இலவச பேருந்து சேவை வழங்கப்படும்” என்று அவர் அறிவித்தார்.

மேலும், “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த 6 மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.20 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு வழங்கப்படும்” என்றும் அவர் வாக்குறுதி அளித்தார்.நடப்பு அரசை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி, “புதுச்சேரியில் ஒவ்வொரு அரசு ஒப்பந்தத்திற்கும் 30% கமிஷன் பெறப்படுகிறது.

போலி மருந்து விவகாரத்தில் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பள்ளிகளுக்கு அருகே மதுபானக் கூடங்கள் தொடங்கப்படுகின்றன. கோயிலுக்கு சொந்தமான இடங்களை விற்று வருகிறார்கள்” என்று பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மாநில அந்தஸ்து உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.ராகுல் காந்தியின் இந்தப் பிரச்சாரம் புதுச்சேரி தேர்தல் களத்தில் பெரும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது.