இபிஎஸ் வாய் இருக்குனு எது வேண்டுமானாலும் பேசுகிறார் - மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

மீண்டும் மீண்டும் நான் திருச்சிக்கு வருவது போல திமுக ஆட்சி மீண்டும் மீண்டும் வர வேண்டும் என பிரசாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

Hero Image

திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகையில், “மீண்டும் மீண்டும் நான் திருச்சிக்கு வருவது போல, திமுக ஆட்சியும் மீண்டும் மீண்டும் வர வேண்டும்” என்று உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார்.

திருவாரூரில் பிரச்சாரத்தைத் தொடங்கிய ஸ்டாலின்,இன்று காலை திருச்சிக்கு வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். “மூன்று வாரங்களுக்கு முன்பு திருச்சியில் மாபெரும் மாநில மாநாட்டுக்காக வந்தேன். இப்போது மீண்டும் நம்முடைய வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க வந்திருக்கிறேன். மீண்டும் மீண்டும் நான் திருச்சிக்கு வருவது போல, திராவிட மாடல் ஆட்சியும் மீண்டும் மீண்டும் வர வேண்டும். அதற்கு நீங்கள் தயாரா?” என்று மக்களிடம் உற்சாகமாகக் கேட்டார்.

மேலும் அவர் பேசுகையில், “2021 சட்டமன்றத் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது தொகுதிகளிலும் நீங்கள் திமுகவுக்கு வெற்றியைத் தந்தீர்கள். அதன் காரணமாகவே திருச்சியில் இருந்து இரண்டு சிறப்பான அமைச்சர்களை தமிழ்நாட்டுக்கு நீங்கள் அனுப்பி வைத்தீர்கள். இந்த முறையும் திருச்சியில் 100% வெற்றியைத் தருவீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

திமுகவின் ‘இல்லத்தரசி’ திட்டத்தை விமர்சித்த அதிமுகவை சாடிய ஸ்டாலின், “இல்லத்தரசி திட்டத்தைப் பார்த்து வயிறு எரிந்து, அது ஊழலுக்கான திட்டம் என்று பழனிசாமி கூறுகிறார். சம்மந்திக்கு காண்ட்ராக்ட் கொடுப்பதற்காகவே அவர்கள் ஆட்சியை நடத்தினார்கள்” என்று கடுமையாக விமர்சித்தார்.

அதிமுக - பாஜக கூட்டணியை கடுமையாக தாக்கிய மு.க.ஸ்டாலின், “அதிமுக - பாஜக கூட்டணி தமிழ்நாட்டின் பெயரைக்கூட ‘தட்சிண பிரதேஷ்’ என்று மாற்ற தயங்க மாட்டார்கள். நம் எதிரிகளையும், உதிரிகளையும் இந்தத் தேர்தலில் வீழ்த்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.திருச்சியில் நடைபெற்ற இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துரைத்து, மக்களிடம் மீண்டும் வெற்றியை உறுதி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார். இந்தப் பிரச்சாரம் திமுகவின் தேர்தல் உத்தியில் முக்கியமான அம்சமாக அமைந்துள்ளது.