“விஜய்க்கு வாக்கு போடாதீர்கள்” – வேலுமணி கடும் தாக்கு

திமுக எதிர்ப்பு வாக்குகள் அதிமுகவுக்கு வர வேண்டும், விஜய்க்கு போகக்கூடாது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

Hero Image

சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை சிங்காநல்லூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.ஆர்.ஜெயராமனை அறிமுகம் செய்யும் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்றார்.இந்த அறிமுகக் கூட்டத்தில் பேசிய எஸ்.பி.வேலுமணி, “அதிமுக ஆட்சியில் கோவை மாவட்டத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது” என்று பெருமிதம் தெரிவித்தார்.

மேலும், சிங்காநல்லூர் தொகுதிக்கான தேர்தல் வாக்குறுதி புத்தகத்தையும் அவர் வெளியிட்டார். இந்நிகழ்வில் தேமுதிக மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்.வேலுமணி தொடர்ந்து பேசுகையில், “கோவை தெற்கு தொகுதி இப்போது விஐபி தொகுதியாக மாறியுள்ளது. இந்தத் தொகுதியில் நாம் வெற்றி பெற வேண்டும். இது நமது மானப் பிரச்சனை. திமுக இங்கு எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. நமது திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார்கள்” என்று திமுக அரசை விமர்சித்தார்.

தவெக தலைவர் விஜய் குறித்து பேசிய வேலுமணி, “விஜய்க்கு போகக் கூடாது. திமுக வெற்றி பெற வேண்டும் என்பதுதான் விஜய்யின் கொள்கை. திமுக எதிர்ப்பு வாக்குகள் அதிமுகவுக்கு வர வேண்டும், விஜய்க்கு போகக் கூடாது” என்று கூறினார். மேலும், “கரூரில் தவெக தொண்டர்களையே காப்பாற்ற முடியவில்லை. விஜய்யால் மக்களை எப்படி காக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.

இந்தக் கூட்டத்தில் அதிமுக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த எஸ்.பி.வேலுமணி, “2026 தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை அமைக்கும்” என்று உறுதியாகக் கூறினார்.

“விஜய்க்கு வாக்கு போடாதீர்கள்” – வேலுமணி கடும் தாக்கு